பாரத தாயை மதமாற்றம் செய்து நமாஸ் செய்ய வைத்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

இந்திய தாயை முஸ்லிமாக மதமாற்றம் செய்து, மண்டியிட வைத்து, இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயல்கிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பள்ளிச் சிறுவர்கள் நடத்திய நாடகத்தின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் சிறுமி ஒருவர் இந்தியத் தாய் போல வேடமிட்டு இருக்கிறார். அப்போது, இஸ்லாமியர்கள் போல உடை அணிந்த சிறுவர்கள் வந்து இந்தியத் தாய்க்குத் தலையில் துணி அணிவித்து, அவரை இஸ்லாமியர் போல மாற்றுவதாக உள்ளது.

நிலைத் தகவலில், “என்ன செய்யரானுங்கன்னு புரியுதா? பாரத மாதாவை முஸ்லிம் ஆக்கி மண்டி போட வெக்கரானுங்க. இதற்கெல்லாம் பதில். சொல்ல வேண்டி இருக்கும்டா. உங்க அடிப்படைவாத புத்தி மாறவே மாறாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை K Srinivasa Rangan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 16ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

மற்றொரு பதிவில், “பாரத மாதாவிற்கு புர்க்கா அணிவிக்கிறார்கள். 2047-ற்குள் இந்தியாவை முழுவதும் முஸ்லிம் நாடாக ஆக்க வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள். இந்துக்களே விழித்துக்கொள் என்றால் நீ வாழ்வதற்கு நாடு இருக்காது என்பதை மறந்து விடாதே .இந்த பள்ளிக்கூடத்தின் மீது. நடவடிக்கை தேவை. சின்ன இந்து குழந்தைகள் மணதில் பாரதமாதா ஒரு முஸ்லீம் பெண் என்று அல்லவா பதிவாகும். .நடவடிக்கை தேவை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Kali Kalai Aarasan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் நடத்திய நாடகத்தின் ஒரு பகுதியை மட்டும் பகிர்ந்தது போல உள்ளது. முழு வீடியோவும் பார்க்காமல் முடிவுக்கு வரமுடியாது என்பதால் அது பற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ஒரு பள்ளியில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது.

இது தொடர்பாக வெளியான செய்தியைப் பார்த்தோம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நாடகம் தயாரிக்கப்பட்டது என்றும், ஆனால் வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். 

மேலும் லக்னோ போலீஷ் கமிஷனர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக லக்னோ போலீசார் விளக்கம் அளித்திப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த வீடியோவை பார்த்தோம். இந்தியத் தாய்க்கு முதலில் இந்துக்கள் தங்கள் பழக்கப்படி வழிபாடு நடத்துகின்றனர். அடுத்ததாக இஸ்லாமியர்கள் வருகின்றனர். அதுதான் நாம் ஆய்வுக்கு எடுத்த பகுதி. அவர்கள் தங்கள் வழக்கம் படி இந்தியத் தாயை மாற்றி வழிபாடு செய்கின்றனர். இஸ்லாமியர்களைத் தொடர்ந்து சீக்கியர்கள் வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே இஸ்லாமிய முறைப்படி உள்ள இந்திய தாயை மாற்றி தங்களுக்கு ஏற்றார்போல மாற்றி வழிபாடு செய்கின்றனர்.

Archive

கடைசியில் கிறிஸ்தவர்கள் வருகின்றனர். அவர்கள் இந்தியத் தாயை இயேசு சிலுவையில் அறைந்தது போன்று மாற்றி, அவர்கள் வழிபாடு செய்துவிட்டு செல்கின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம் போல இந்திய அன்னையை மாற்றி வழிபாடு நடத்துவது போல வீடியோ இருந்தது. மேலும் லக்னோ போலீஸ் தரப்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டிருந்த தகவல் தவறானது என்று உறுதியானது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவில் இது தொடர்பாக கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதில், நாடகத்தின் முழு வீடியோவையும் வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவை பார்த்தோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் தங்களுக்கு ஏற்ற வகையில் இந்தியத் தாயை மாற்றிய பிறகு, கடைசியில் அனைவரும் இந்தியத் தாய் முன்பு ஒன்று கூடுகின்றனர். அவர்களுக்குள் யாருக்கு இந்தியத் தாய் என்று சண்டை வருவது போன்று காட்சி அமைத்திருந்தனர். இந்தியத் தாய் அனைவருக்கும் பொதுவானவர், மதத்துக்குள் அவரை சிக்க வைக்காமல் மத நல்லிணக்கம் காக்க வேண்டும் என்பது போன்று அந்த நாடகம் அமைக்கப்பட்டதாகப் பள்ளி தரப்பில் கூறியிருப்பதும் தெரிந்தது.

Archive

பள்ளியில் மத நல்லிணக்கத்துக்காக ஒரு நாடகம் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்து, இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றப் பார்க்கிறார்கள். இந்துக்கள் வாழ நாடே இல்லாமல் போய்விடும் என்று எல்லாம் இஷ்டத்துக்கும் கதை விட்டு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் வீடியோவை பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மத நல்லிணக்கத்தின் அவசியம் பற்றிய நாடகத்தின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து எடுத்து, இந்தியத் தாயை இஸ்லாமியர் ஆக்கி மண்டியிட்ட வைத்து ரசித்த இஸ்லரியர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாரத தாயை மதமாற்றம் செய்து நமாஸ் செய்ய வைத்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False