பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தையொட்டி நடந்த பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பேரணியாக வந்த பா.ஜ.க-வினரை பெருந்திரளான மக்கள் தடுத்து நிறுத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "சங்கிகளை தெருவுக்கு தெரு விரட்டி அடிக்கும் பீகார் மக்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை தமிழன் மீம்ஸ் 4.0 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 அக்டோபர் 25 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவைப் பார்க்கும் போது இது பீகாரில் நடந்தது போலத் தெரியவில்லை. பல போலீசார் பஞ்சாபிகளைப் போலத் தலைப்பாகையுடன் இருந்தனர்.

ஒரு வேளை பஞ்சாபில் இருந்து பீகார் தேர்தல் பணிக்காக வந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்களாக இருக்கலாம் என்று நினைத்தோம். வண்டியில் அம்பாலா போலீஸ் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ ஹரியானா மாநிலத்தில் நடந்த பா.ஜ.க பேரணியின் போது எடுக்கப்பட்டது என்று சில ட்வீட் பதிவுகள் கிடைத்தன. விவசாய சட்டத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பா.ஜ.க பேரணியை அம்பாலாவில் விவசாயிகள் தடுத்து நிறுத்தினார்கள் என்று கூறப்பட்டு இருந்தது.

Archive

அதே நேரத்தில் பீகாரில் பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சிலர் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். எனவே, இதை உறுதி செய்ய பீகார், பா.ஜ.க பேரணி, தடுத்து நிறுத்தம் போன்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

Archive

அம்பாலாவில் பா.ஜ.க-வின் விவசாய சட்டங்களுக்கு ஆதரவான பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதா என்று கூகுளில் தேடினோம். அப்போது அது தொடர்பாக செய்தி, வீடியோக்கள் கிடைத்தன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அசல் வீடியோ பதிவு அம்பாலா நிகழ்வின் போது எடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: tribuneindia.com I Archive

வீடியோவைப் பார்த்த போது அதில் உள்ள போலீஸ் வாகனங்களில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவிடம் கேட்ட போது, அவர்கள் அதில் ஹரியானா போலீஸ் என்று எழுதப்பட்டுள்ளது. இது ஹரியானாவில் நடந்த பா.ஜ.க பேரணிக்கு எதிரான போராட்டத்தின் காட்சி என்றனர்.

ஹரியானாவின் அம்பாலாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவில் பஞ்சாப் தலைப்பாகை அணிந்த காவலர்களை அதிக அளவில் காண முடிகிறது.

போலீஸ் வாகனத்தில் அம்பாலா போலீஸ் என்று எழுதப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது.

இந்தியில் ஹரியானா போலீஸ் என்று தெளிவாக எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

பீகாரில் பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

இதன் அடிப்படையில் இந்த வீடியோவில் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் இது பீகார் சட்டமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது இல்லை, ஹரியானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பீகாரில் பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக பகிரப்படும் வீடியோ ஹரியானாவில் எடுக்கப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பீகாரில் பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False