வட இந்தியாவில் ஒன்றாக அமர்ந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India கல்வி

வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ மற்றும் அதனுடன் தகவல் ஒன்றை சேர்த்து அனுப்பிய வாசகர் ஒருவர், இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில் மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவர் அனுப்பிய பதிவில் “வடநாட்டில் நீட் தேர்வு சிறப்பாக எழுதும்பொழுது எடுக்கப்பட்டது. இப்படிதான் வடநாட்டில் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் தேர்வாகி வருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக்கில் இந்த பதிவை பகிர்ந்து வருகிறார்களா என்று பார்த்த போது, பலரும் இதை பகிர்ந்து வருவதை காண முடிந்தது. Thomas Raja S என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த வீடியோவை 2022 ஆகஸ்ட் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

மாணவர்களைப் பார்க்கும் போது நீட் தேர்வு எழுதுபவர்கள் போல இல்லை. மேலும், வீடியோவில் மாணவர் ஒருவர் பல மாணவர்களின் ஹால் டிக்கெட்டை எடுத்து காண்பிக்கிறார். அதில் பாடலிபுத்ரா பல்கலைக் கழகம், பி.ஏ தேர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மாணவர் நாளந்தா ஷோத் சன்ஸ்தான் மற்றும் கல்லூரி (Nalanda sodh sensthan) என்ற கல்லூரியில் படிக்கிறார் என்றும் தேர்வு எழுதும் இடம் அல்லமா இக்பால் கல்லூரி (Allama Iqbal College Biharsharif) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

வேறு ஒரு மாணவரின் ஹால் டிக்கெட்டில், இளநிலை ரெகுலர் என்று குறிப்பிட்டு கல்லூரியின் பெயர் , பிஏ வரலாறு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மாணவர் பொருளாதாரம், வரலாறு, புவியியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத உள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் தேர்வை அவர் 20 ஜூலை 2022 அன்று எழுதியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இவர்கள் நீட் தேர்வு எழுதியவர்கள் இல்லை என்பது தெளிவானது. 

இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இவர்கள் பீகார் மாநிலம் நாலந்தாவில் மாணவர்கள் இளங்கலை தேர்வு எழுதிய போது எடுக்கப்பட்டது என்று சில செய்திகள் கிடைத்தன. ஆனால், முறைகேடான வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அதற்கு துணை போன ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: etvbharat.com I Archive 1 I bhaskar.com I Archive 2 I theindiaprint.com I Archive 3

நம்முடைய ஆய்வில், வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பகிரப்படும் வீடியோ பாடலிபுத்ரா பல்கலைக் கழக இளநிலை தேர்வின் போது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முடிவு:

வட இந்தியாவில் ஒன்றாக அமர்ந்து காப்பி அடித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வட இந்தியாவில் ஒன்றாக அமர்ந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False