
நேபாளத்தை மீண்டும் இந்து நாடு என்று அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் கோவில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேபாளம்… மீண்டும்….. இந்து நாடாக தன்னை அறிவித்து கொண்டுள்ளது….. உலகில் இந்துமக்களுக்கான முதல் தனிநாடு…. இந்து தர்மத்தின் சொந்த வீடு… நேபாளம் இந்துசமயத்தின் பூபாளம்… ஆல்போல்தழைத்து… அருகுபோல் முகிழ்த்து…. உலகின் முன்னணி நாடாக திகழட்டும்…. பாரதத்தின் சகோதர நாடாக பாரினில் விளங்கட்டும்…. உலகம் முழுவதும் உள்ள… இந்துமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்…. நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை சிங்கராஜா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மே 11 அன்று பகிர்ந்துள்ளார். இவரைப் போலப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகின் ஒரே இந்து நாடாக நேபாளம் இருந்து வந்தது. 2007ம் ஆண்டு அதுவும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்போது இருந்தே மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீண்டும் நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக நேபாள ராஷ்டிரிய பிரஜடன்ரா கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். தீர்மானத்தைக் கொண்டு வர 61 நாடாளுமன்ற உறுப்பினர்களாவது தேவை என்ற நிலையில் 21 எம்.பி-க்கள் மட்டுமே முன்மொழிந்ததால் அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

அசல் பதிவைக் காண: dinakaran.com I Archive
அதன் பிறகும் தொடர்ந்து நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. நேபாளத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேபாளம் மீண்டும் தன்னை ஒரு இந்து நாடு என்று அறிவித்துக்கொண்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் பதிவில் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.
நேபாளம் இந்து நாடாக அறிவிக்கப்பட்டது என்று தமிழ், ஆங்கிலம் என எந்த ஊடகத்திலும் செய்தி எதுவும் வெளியாகாத நிலையில் இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். கடைசியாக கடந்த ஜனவரி மாதம் நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடந்தாக செய்தி கிடைத்தது. அதைத் தவிர நேபாளம் இந்து நாடாக மாறியது என்றோ, வேறு எந்த செய்தியோ நமக்குக் கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: republicworld.com I Archive
சில தினங்களுக்கு முன்புதான் நேபாள அரசு கவிழ்ந்தது. அதற்குள்ளாக புதிதாக அரசு பதவியேற்று, இந்து நாடாக மாறும் என்று அறிவிப்பு வெளியிட்டதா என்று பார்த்தோம். இது தொடர்பாக கூகுளில் பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். மே 10, 2021 அன்று நேபாள பிரதமராக இருந்த ஒலி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார் என்ற செய்தி நமக்குக் கிடைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத சூழலில் அந்த நாட்டின் மதம் தொடர்பான அரசியலமைப்புச் சட்ட முடிவுகள் எடுக்க முடியாது என்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive
தொடர்ந்து தேடிய போது அங்கு புதிய அரசு எதுவும் அமையவில்லை என்று தெரிந்தது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் சென்டர் என்ற கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் நேபாளி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக செய்திகள் கிடைத்தன. ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ள கட்சிகள் பட்டியலில் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் நேபாள ராஷ்ட்ரிய பிரஜடன்ரா கட்சி இடம் பெறவில்லை. நேபாளம் இந்து நாடாக மீண்டும் மாறுவது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive
நேபாளத்தில் புதிய அரசை அமைக்கும் முயற்சிகள் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பெரும்பான்மை ஆதரவைப் பெற பேச்சு வார்த்தையில் தீவிரமாக உள்ளன. இந்த சூழலில் நாட்டின் மதம் பற்றி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. புதிதாக ஆட்சி அமைந்து அவர்கள் முடிவு செய்தால்தான் மீண்டும் நேபாளம் இந்து நாடாக மாறும். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு ஆட்சி அமைக்க நேபாளி காங்கிரஸ் முயற்சி செய்து வரும் சூழலில் நாட்டின் மதத்தை தற்போது முடிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
நம்முடைய ஆய்வில்,
நேபாளத்தில் தற்போது அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து புதிய அரசு பொறுப்பேற்காத சூழல் உள்ளது தெரியவந்துள்ளது.
2015ம் ஆண்டு இந்து நாடாக மாற வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் போதுமான எம்.பி-க்கள் முன் மொழியாததால் நிராகரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
புதிதாக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில், நேபாளம் மீண்டும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ள சூழலில் அந்தநாடு இந்து நாடாக அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
