
‘’நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ ஆகியோர் கொரோனா பாதித்து 2021ல் மரணம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்த தமிழ் சினிமா பிரபலங்கள் என்று தலைப்பிட்டுள்ளனர்.

ஆனால், செய்தியின் உள்ளே வேறு நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக, வீடியோ ஒன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இதில் எங்கேயும், நடிகர் செல்வா, ரகுமான் மற்றும் ஸ்ரீ ஆகியோரின் பெயரை காணவே இல்லை. பிறகு ஏன், அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர் என்று வாசகர்கள் பலரும் நம்மிடம் கேள்வி எழுப்பியதன் பேரில்தான் ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தியில் நடிகர்கள் செல்வா, ரகுமான் மற்றும் ஸ்ரீ ஆகியோரின் புகைப்படங்களை தவறுதலாக பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது. இருந்தாலும், வாசகர்களை ஈர்க்கவும், கவனத்தை திசை திருப்பி, லைக்ஸ் வாங்கவும், அதிக பார்வை பெறவும் இத்தகைய தந்திரத்தை பின்பற்றி செய்தி வெளியிட்டுள்ளனர். இது தவறான முன்னுதாரணமாகும். ஏனெனில், உண்மையாக உள்ள நபர்களின் புகைப்படங்களை இப்படி பகிர்வதை சம்பந்தப்பட்ட நபர் பார்த்தால் என்ன நினைப்பார் என்பதை இப்படியான வதந்திகளை வெளியிடுவோர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இதுதொடர்பாக, நாம் தமிழ் சினிமா பிஆர்ஓ வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘’இப்படி சில இணையதளங்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் தவறான செய்திகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டுவிடுகிறார்கள். இதனால், சினிமா சார்ந்தவர்கள் வெளியில் சொல்ல முடியாத மன வேதனை அடைகிறார்கள். இது முற்றிலும் தவறான செயல்,’’ எனக் குறிப்பிட்டனர்.
நடிகர்கள் செல்வா, ரகுமான், ஸ்ரீ பற்றி புகைப்படம் வெளியிட்டது தவறாகும். அதேசமயம், இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டோர் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அந்த தகவல் உண்மைதான்.
எனவே, பாதி உண்மை, பாதி தவறான தகவல் இந்த செய்தியில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனை உறுதிப்படுத்தாமல் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவர் பகிர்ந்திருப்பதாகவும் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
இதுதவிர, சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் ஐடி, நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் இயங்கும் ஒரு போலி ஐடியாகும். இதனை யாரும் உண்மையான ஐடி என்று நம்பி, இதில் வெளியிடப்படும் தகவல்களை அப்படியே பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டு வாசகர்களை குழப்பிய இணையதளம்!
Fact Check By: Pankaj IyerResult: Misleading
