பங்களாதேஷில் இந்து ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal False சர்வதேசம் | International

வங்கதேசத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்து ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்துப் பிரிவு உபசார விழா நடத்திய இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வயதான ஒருவருக்கு இஸ்லாமியர்கள் செருப்பு மாலை அணிவித்து வீடியோ புகைப்படங்கள் எடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த நபரே கண்களை மூடியபடி அமைதியாக இருக்கிறார். நிலைத் தகவலில், “பங்களாதேஷில் 43 வருடம் ஆசிரியராக பணிபுரிந்த சிறுபான்மை ஹிந்து ஆசிரியருக்கு அந்த நாட்டு பெரும்பான்மை இஸ்லாமியர்கள் சார்பில் நடத்தபட்ட பிரிவு உபசார விழா .. இந்தியாவில் எந்த சிறுபான்மை இஸ்லாமிய ஆசிரியர்க்கும் இந்த கொடுமை நடந்தது இல்லை்.. வந்த பின் வருந்துவதை விட வரும் முன் காப்பாதே சிறந்தது..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர், இந்துக்களுக்கு அவமரியாதை செய்யப்படுகிறது எனவே வரும்முன் காக்க வேண்டும் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் 99 சதவிகிதம் போலியான பொய்யான தகவலாகவே உள்ளது. வரும் முன் காக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடப்பட்டுள்ளதால் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் சமூக ஊடகங்களில் இந்த பதிவைப் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது ஜூன் 19ம் தேதி வங்க மொழியில் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்று நமக்கு கிடைத்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்த போது, “வங்கதேசத்தின் ராஜ்பரி மாவட்டத்தில் மக்களுக்காக சேவை செய்து வந்த மருத்துவர் அகமது அலி அவமரியாதை செய்யப்பட்டார். மதத்தை அவமரியாதை செய்தார் என்ற பொய்யைப் பரப்பி எந்த விசாரணையும் இன்றி தாக்கப்பட்டார்” என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: kalerkantho.com I Archive I dhakatimes24.com I Archive

வங்கதேசம், ராஜ்பரி மாவட்டம், டாக்டர் அகமது அலி என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். வங்க மொழிக்கு மாற்றித் தேடிய போது இது தொடர்பாக வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சியை புகைப்படமாக வைத்து வெளியான செய்திகளும் இருந்தன. அதில், “நபிகள் நாயகத்தை அவமதித்ததாக ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரியை ஒரு கும்பல் தாக்கி, செருப்பு மாலை அணிவித்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

எல்லா செய்திகளிலும் அவருடைய பெயர் அகமது அலி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த செய்தியிலும் அவர் ஆசிரியர் என்று குறிப்பிடப்படவில்லை. இஸ்லாமியர் ஒருவர் தங்கள் இறைத்தூதரைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு இஸ்லாமியர்களே அவரைத் தாக்கியதாகத்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வதந்தி தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்திலும் கட்டுரை வெளியிட்டுள்ளனர். அந்தக் கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

வங்கதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோவை எடுத்து இந்து ஆசிரியர் தாக்கப்பட்டார் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோவை எடுத்து இந்து ஆசிரியர் தாக்கப்பட்டதாக தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பங்களாதேஷில் இந்து ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply