
மாட்டு சாணம் சாப்பிட்ட நபர் அடுத்த நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வட இந்திய மருத்துவர் ஒருவர் மாட்டு சாணம் சாப்பிட்ட பழைய வீடியோவுடன் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை சேர்த்து வீடியோ உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், “மாட்டு சாணம் சாப்பிட்ட அடுத்த நாள் ஐஸுவில் சங்கி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “வீராப்புக்கு மாட்டு சாணம் சாப்பிட்டு அடுத்த நாள் மருத்துவமனையில் படுத்திருக்கான் இந்த சங்கி ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா காலத்தில் மருத்துவர் ஒருவர் மாட்டு சாணம் சாப்பிட்டது தொடர்பான வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். எனவே, அந்த மருத்துவர் உண்மையில் மாட்டு சாணம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா அல்லது வேறு காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டாரா, வீடியோவில் இருப்பது அந்த மருத்துவர் தானா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோவில் இடம் பெற்ற ஐ.சி.யூ என்ற தீவிர சிகிச்சைப் பிரிவு காட்சியை மட்டும் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த புகைப்படமானது 2017ம் ஆண்டு ஒரு நிதி திரட்டும் இணையதளத்தில் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அதில் “படத்தில் காணப்படும் நபரின் பெயர் பிதான் தாபா (Bidhan Thapa) இவர் 2017ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி திடீர் இதய செயலிழப்பு காரணமாக அமெரிக்காவின் ஜான் ஹாக்கின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 ஜூலை 2017 அன்று உயிரிழந்தார். இவரது உடலை சொந்த நாடான நேபாளத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்றும் அதற்கு நிதி உதவி தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர். 19,952 அமெரிக்க டாலரை பொது மக்கள் உதவி செய்திருந்ததும் தெரிந்தது. இதன் மூலம் பழைய புகைப்படத்தை எடுத்து வட இந்திய மருத்துவர் தொடர்பாக வதந்தி பரப்பியிருப்பது உறுதியானது.
உண்மைப் பதிவைக் காண: gofundme.com I Archive
அடுத்ததாக சாணம் சாப்பிட்ட மருத்துவர் தொடர்பாக ஆய்வு செய்தோம். கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடியபோது அந்த மருத்துவரின் வீடியோக்கள் மற்றும் செய்திகள் நமக்கு கிடைத்தன. அந்த மருத்துவர் பல ஆண்டுகளாக மாட்டுச் சாணம் சாப்பிட்டு வந்ததாகவும், கர்ப்பிணிகள் மாட்டுச் சாணம் சாப்பிடுவது சுகப்பிரசவத்துக்கு உதவி செய்யும் என்று அவர் வீடியோ வெளியிட்டிருப்பதும் தெரிந்தது.
அந்த மருத்துவரின் பெயர் மனோஜ் மிட்டல் என்பதும் இவர் ஹரியானாவின் கர்னால் (Karnal) என்ற ஊரில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவித்தன. இவர் மாட்டுச் சாணம் சாப்பிட்ட வீடியோவுடன் பல நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்களை வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது.
நம்முடைய ஆய்வில் சாணம் சாப்பிட்ட நபர் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார் என்று பரவும் புகைப்படம் அமெரிக்காவில் இறந்த ஒருவரின் புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அமெரிக்காவில் 2017ம் ஆண்டு இறந்த நபரின் புகைப்படத்தை மாட்டு சாணம் சாப்பிட்ட சங்கி அடுத்த நாளே ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“மாட்டு சாணம் சாப்பிட்ட சங்கி அடுத்த நாளே ஐ.சி.யூ-வில்” என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
