
தமிழகத்தில் அதிமுக 130 முதல் 140 தொகுதிகளை வெல்லும் என்று சிஎன்என் ஊடகம் கூறியதாக போலியான செய்தியை அ.தி.மு.க பரப்பியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
“அ.தி.மு.க பரப்பிய பொய் செய்தி!” என்று குறிப்பிட்டு கலைஞர் செய்திகள் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது. மேலும் அதில், “தமிழ்நாட்டில் 130-140 தொகுதி வரை அதிமுக வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று CNN செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளிட்டுள்ளதாக பரவும் செய்தி போலியானது. பரவி வரும் அந்த செய்தி Gemini AI மூலம் உருவாக்கப்பட்டது. இது போன்ற எந்த ஒரு கருத்துக் கணிப்பையும் CNN News 18 ஊடகம் வெளியிடவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சிஎன்என் கருத்துக்கணிப்பு எதையும் வெளியிடவில்லை என்று ஃபேக்ட் செக் நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தி அடிப்படையில் கலைஞர் செய்திகள் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது. தேர்தல் நேரங்களில் ஊடகங்கள் கருத்துக் கணிப்பை வௌியிடும். ஆனால், எந்த ஒரு கருத்துக் கணிப்பையும் அந்த குறிப்பிட்ட நிறுவனம் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
சிஎன்என் நியூஸ் 18 யூடியூப் பக்கத்தில் இது தொடர்பாக தேடிப் பார்த்தோம். அப்போது ஏப்ரல் 6, 2026 அன்று கருத்துக் கணிப்பு ஒன்றை அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது தெரிந்தது. வீடியோவின் 3.48வது நிமிடத்தில் தி.மு.க-வுக்கு 90 முதல் 100ம் அதிமுக-வுக்கு 130 முதல் 140 தொகுதிகள் வரையிலும் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
தொடர்ந்து அந்த வீடியோவின் 4.10வது நிமிடத்தில் வேறு ஒரு நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பில் தி.மு.க-வுக்கு 44 சதவிகித வாக்குகளுடன் 159 முதல் 165 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அதிமுக-வுக்கு 64 முதல் 70 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive
தொடர்ந்த தேடிய போது நியூஸ் 18 ஆங்கிலத்தில் செய்தி வெளியாகி இருந்ததையும் கண்டறிந்தோம். அதில் சி-ஓட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு படி தி.மு.க-வுக்கு 41 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், ஓட்டர் வைப் மூலம் சிஎன்என் – நியூஸ் 18ன் நிறுவனம் நடத்திய வோட் டிராக்கர் ஒப்பீனியன் போல் படி, அதிமுக-வுக்கு 130 முதல் 140 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் சிஎன்என் நியூஸ் 18 கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்று வெளியான தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
அதிமுக ஆட்சி அமைக்கிறது என்று சிஎன்என் வெளியிட்டதாக பரவும் கருத்துக் கணிப்பு போலியானது என்று கலைஞர் செய்திகள் வெளியிட்டுள்ள தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


