‘’ திமுக.,வில் தலித்துகளுக்கு மரியாதை இல்லை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’திமுக.,வில் தலித்துகளுக்கு ஒரு சதவீதம் கூட மரியாதை இல்லாமல் நடத்துகின்றனர். இதை கண்டும் காணாமல் தொல் திருமாவளவன் ஏன் இவர்களுக்காக சொம்படித்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் தனது இனத்தை பணத்திற்காக விற்றுவிட்டாரா’’ என்று எழுதப்பட்டுள்ளது. அதன் கீழே, ஆடை அவிழ்க்கப்பட்ட நிலையில் ஒருவர் அமர்ந்துள்ள புகைப்படம் இணக்கப்பட்டு, ‘ஏலம் எடுக்க சென்ற தலித் சமூகத்தவரை அரை நிர்வாணமாக்கிய திருட்டு திமுக.,வினர்’ என்றும் எழுதியுள்ளதைக் காண முடிகிறது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் பற்றி நாம் தகவல் தேடியபோது, கடந்த அக்டோபர் 31, 2023 அன்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதைக் கண்டோம். இதன்படி, பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் யூனியனில் உள்ள 31 கல் குவாரிகளை, ஏலம் விட பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக விண்ணப்பிக்க, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம் வந்த பாஜக மற்றும் திமுக., வினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், பா.ஜ.க.வைச் சேர்ந்த, பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48) கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதுதவிர, அங்கிருந்த பாஜக.,வினர் மற்றும் போலீசாரும் தாக்கப்பட்டதாக, தெரிகிறது. இதன்பேரில் திமுக.,வினர் சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

செய்தி ஆதாரம் கீழே…

Maalaimalar Link l Asianetnews link l

மேலும், தாக்கப்பட்ட பாஜக.,வினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

organiser.org link l dinamalar link

இதன்பேரில் நாம் திமுக தரப்பில் விசாரித்தபோது, ‘’இந்த சம்பவத்திற்கு ஜாதியை காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல,’’ என்றனர்.

போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘’இது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வகையில் நிகழ்ந்த மோதல் சம்பவம். அடிப்படை உண்மை புரியாமல், திமுக உறுப்பினர்கள் தமது கட்சியில் உள்ள தலித் உறுப்பினர்களை தாக்கியதாகக் கூறி சிலர் வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்றனர்.

எனவே, நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

குறிப்பிட்ட சம்பவம் ஜாதி காரணமாக நிகழவில்லை. அத்துடன், திமுக., வில் தலித்களுக்கு அவமரியாதை எதுவும் நிகழவில்லை. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற வகையில் டெண்டர் எடுப்பதில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. தாக்கப்பட்டவர்களில் தலித் சமூகத்தினர் உள்ளதால், இது திமுக உள்கட்சி மோதல் என்று அர்த்தப்படுத்த முடியாது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில் முழு உண்மை இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:திமுக.,வில் தலித்துகளுக்கு மரியாதை இல்லை என்று பகிரப்படும் தகவல் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading