கொரோனா வைரஸ்க்கு ஈழத் தமிழ்ப்பெண் மருந்து கண்டுபிடித்தாரா?

Coronavirus சமூக ஊடகம் | Social மருத்துவம் I Medical

கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்தை ஈழத் தமிழ் பெண் கண்டுபிடித்தார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கிருமியின் கற்பனை படம் மற்றும் பெண் ஒருவரின் படத்தை சேர்த்து யாரோ பதிவிட்டதை ஸ்கிரீன் ஷாட் செய்தது போல உள்ளது. அதில், “கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்த ஈழத் தமிழச்சி. தமிழனின் பெருமைமிகு வரலாறு மீண்டும் திரும்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, படித்ததில் பிடித்தது என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Kanaga Rajan Kanaga Rajan‎ என்பவர் 2020 பிப்ரவரி 2ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா வைரஸ் கிருமி பீதியைப் பயன்படுத்தி பலரும் பிரபலம் அடைய மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர். வைரஸ் கிருமி தற்போதுதான் சீனாவில் பரவியுள்ளது. குறிப்பிட்ட வுகான் நகரிலிருந்து வெளியேறிய மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது. அப்படி இருக்கும்போது கொரோனா வைரஸ் கிருமிக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பலரும் கூறி வருகின்றனர். சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்று பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை எல்லாம் நம்ப வேண்டாம் என்று மருத்துவ உலகம் கூறி வருகிறது.

இந்த பதிவில் குறிப்பிட்டது போன்று, கொரோனா வைரஸ் கிருமிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதா, அதை கண்டுபிடித்தது ஈழத் தமிழ் மருத்துவரா என்று ஆய்வு செய்தோம்.

கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். உலக சுகாதார நிறுவன இணையதளத்தில் இது தொடர்பாக தேடியபோது அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது என்றும், எச்சரிக்கையாக செயல்படும்படி மட்டுமே அது எச்சரிக்கை விடுத்திருந்தது.

who.intArchived Link

இலங்கையில் இதுதொடர்பாக ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று அறிய கூகுளில் டைப் செய்து தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இந்த படத்தை அப்படியே ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போதும் இது தொடர்பாக எந்த ஒரு பதிவும் நமக்கு கிடைக்கவில்லை.

Search Link 1Search Link 2

கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பு பற்றி தமிழில் ஏராளமான மருத்துவ புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ள மருத்துவர் கு.கணேசனிடம் கேட்டோம்.

“வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால், வைரஸ் கிருமிக்கு மருந்து கண்டுபிடிப்பது அரிது. சாதாரணமாக எந்த ஒரு நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அது பல ஆண்டுகள் ஆராய்ச்சி தேவை. ஆராய்ச்சியில் மருந்து கண்டுபிடித்தால் முதலில் அதை விலங்குகளுக்கு கொடுப்பார்கள். பிறகு, நோயாளிகளுக்கு கொடுக்கப்படும். இந்த இரண்டிலும் வெற்றி கிடைத்தால் மட்டுமே சாதாரண மக்களுக்கு அளித்து பரிசோதனை செய்யப்படும். இதன் பிறகு மருந்து தயாரிக்க அனுமதி அளிக்கப்படும். ஒரு வாரத்தில் மருந்து கண்டுபிடிப்பது எல்லாம் சாத்தியமே இல்லை. 

புதிதாக பரவிய கிருமியை வைரஸ் என்று சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். அதன் டி.என்.ஏ-வை பிரித்தெடுக்கும் ஆய்வில் தற்போது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வைரஸ் பற்றி ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் பிறகுதான் மருந்து கண்டுபிடிப்பது எல்லாம் சாத்தியமாகும்… இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை ஒன்றும் செய்வது இல்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதுவாக குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வெளியேறிவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்றார்.

நம்முடைய ஆய்வில்,

கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிட வில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவு தொடர்பான எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக மருந்து கண்டுபிடித்த ஈழத் தமிழச்சி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனா வைரஸ்க்கு ஈழத் தமிழ்ப்பெண் மருந்து கண்டுபிடித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “கொரோனா வைரஸ்க்கு ஈழத் தமிழ்ப்பெண் மருந்து கண்டுபிடித்தாரா?

Comments are closed.