
சென்னையில் பெய்த கன மழையில் சாலையில் தெர்மாகோல் படகு சவாரி செய்யும் நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் ஓடும் மழை வெள்ளத்தில் ஒருவர் ஒய்யாரமாக தெர்மாகோலில் படுத்தபடி படகு சவாரி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “4000 கோடியில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொண்டு முடிக்கப்பட்டது சென்னை மேயர் _ விடியல் பயணம் ..😍💥 அது கழக ஆட்சியிலே சாத்தியம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவானது ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 15ம் தேதி பகிரப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
‘சென்னையில் ரூ.4000 கோடி செலவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டும், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல செல்கிறது’ என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.
இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் எடுக்கப்பட்டதாகும். டெல்லியில் கனமழை பெய்த போது இந்த வீடியோவை டெல்லியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் சிலர் வதந்தி பரப்பினர். அப்போது, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். எனவே, இந்த வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்ய அந்த ஆதாரங்களைத் தேடி எடுத்தோம்.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive 1 I andhrajyothy.com I Archive 2
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ, நன்கு கவனத்துடன் எடிட் செய்யப்பட்டுள்ளது. முழு வீடியோவில் சில கடைகளின் பெயர் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அவை எல்லாம் அகற்றப்பட்டு, எங்கு எடுக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியாத அளவுக்கு வதந்தி பரப்பும் நோக்கில் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை 2023 ஜூலை 1ம் தேதி இந்தி ஊடகமான ABP தன்னுடைய செய்தியில் வெளியிட்டிருந்தது. அதே போல் குஜராத்தி ஊடகமான Zee 24 Kalak எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டிருந்தது. அந்த செய்திகளில் இந்த வீடியோ குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த வீடியோவை பார்க்கும் போது கடைகளின் பெயர்கள் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடியும். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
வீடியோவில் ஒரு அரசியல் கட்சியின் ஐடி விங் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தின் அவல நிலை இது என்று தெரிந்தும், வீடியோவை எடிட் செய்து பகிர்ந்துள்ளனர். இருப்பினும், நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ குஜராத் மாநிலத்தை சார்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு விஷமத்தனமானது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரூ.4000 கோடிக்கு மழை நீர் வடிகால் பணி மேற்கொண்டும் சென்னை மழை வெள்ளத்தில் தெர்மாகோல் படகில் பயணிக்கும் மக்கள் என்று பரவும் வீடியோ குஜராத்தைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சென்னை மழை நீரில் தெர்மாகோல் சவாரி செய்யும் நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
