டாக்டர் ராமதாஸ் காயத்ரி ரகுராமுக்கு பதில் அளித்தாரா?

அரசியல் சமூக ஊடகம்

நடிகை காயத்ரி ரகுராமுக்கு டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதில் அளித்தது போன்ற ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Dr Ramdoss 2.png
Facebook LinkArchived Link

பா.ம.க நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் ட்வீட் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “காயத்திரி ரகுராம் வேண்டுமானால் எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ துணைக்கு அழைத்துகொள்ளட்டும். பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்க வன்னியர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. காலம் மலையேறிவிட்டது. எங்களுக்கும் புத்திவந்துவிட்டது என்று அவரிடம் சொல்லுங்கள்” என்று உள்ளது. இந்த பதிவை டாக்டர் ராமதாஸ் நவம்பர் 19 காலை 10.10க்கு வெளியிட்டது போல அதில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, வி.உ.இளவேனில் என்பவர் 2019 நவம்பர் 19 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பார்க்க டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ட்விட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டது போலவே உள்ளது. ஆனால், பதிவிட்ட விதம், குறிப்பாக ‘எங்களுக்கும் புத்தி வந்துவிட்டது’ என்று அவர் கூறியதாக உள்ளது எல்லாம் நெருடலை ஏற்படுத்தியது.  

உண்மையில் இந்த பதிவை டாக்டர் ராமதாஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தைச் சென்று பார்த்தோம். சென்னை மாநகராட்சி நடைபாதை தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பு, முரசொலி அமைந்துள்ள இடம் தொடர்பாக அவர் ட்வீட் செய்தது தெரிந்தது. ஆனால், காயத்ரி ரகுராம் பற்றி அவர் ட்வீட் செய்ததாக எதுவும் இல்லை.

Dr Ramdoss 3.png
Archived Link

டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தையும் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ட்விட்டர் ஐ.டி போலியானது என்பது தெரிந்தது. டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் ஐடி-யானது Dr S Ramadoss @drramadoss என்று இருக்கும். ஆனால், ஃபேஸ்புக்கில் பகிரப்படும் படத்திலோ, Dr S Ramadoss @erramadoss என்று இருந்தது. அப்படி ஏதாவது ஒரு ஐ.டி உள்ளதா என்று தேடிப்பார்த்தோம். ட்விட்டரில் அப்படி ஒரு ஐ.டி-யில்லை என்பது தெரிந்தது.

Dr Ramdoss 4.png

தொடர்ந்து தேடியபோது, டாக்டர் ராமதாஸ் பெயரில் போலி ட்வீட் பரவுவதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது. யாரோ மர்மநபர் காயத்ரிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் பெயரில் போலியாக ட்வீட் தயாரித்து வெளியிட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

tamilminutes.comArchived Link

இந்த தகவலை உறுதி செய்ய, பா.ம.க மூத்த நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், “ஐயாவுக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. அதனால், இந்த தகவல் அவர் அளவுக்கு எல்லாம் போக வேண்டியது இல்லை. எந்த ஒரு ட்வீட்டையும் வெளியிட்டு பிறகு அழிக்கும் பழக்கம் மருத்துவர் ஐயாவுக்கு இல்லை. இது போலியானதுதான்” என்றார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நடிகை காயத்ரி ரகுராமுக்கு டாக்டர் ராமதாஸ் பதில் அளித்தார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் ட்வீட் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:டாக்டர் ராமதாஸ் காயத்ரி ரகுராமுக்கு பதில் அளித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •