
கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூறினோம். அதைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்விக் கடன், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சொன்னோம். இப்போது தமிழக நிதி நிலைமை சரியில்லை. எனவே கல்விக் கடன், விவசாய கடன்கள் தள்ளுபடி சாத்தியமில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு” என்று இருந்தது.
இந்த பதிவை ல.விஜய் பா.ம.க என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 27ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் புது புது வாக்குறுதிகள் வேண்டுமானால் அளிக்கலாமே தவிர, அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டோம் என்று எந்த அரசியல் கட்சித் தலைவரும் கூற வாய்ப்பு இல்லை.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று தொடர்ந்து தி.மு.க-வினர் கூறி வருகின்றனர். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து உறுதி அளித்து வருகிறார். இந்த சூழலில் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று ஸ்டாலின் கூறியிருந்தால் பரபரப்பான செய்தியாகியிருக்கும். ஆனால், எந்த ஒரு ஊடகத்திலும், ஜூனியர் விகடனிலும் கூட அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
முதலில் ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்று 2022 ஜனவரி 25ம் தேதி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. ஆனால் அதில், “நீங்கள் யார்? பாரதியார், வ.உ.சி, வேலுநாச்சியார், மருது சகோதரர்களை யார் என்று கேட்க நீங்கள் யார்? – குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது பற்றி முதல்வர் ஸ்டாலின் பேச்சு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம் என்று தெரிந்தது.
எனவே, இது தொடர்பாக ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் “இந்த நியூஸ் கார்டு தவறானது. இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தேர்தலின் போது அளிக்கப்பட்ட விவசாய கடன், கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:விவசாய, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று ஸ்டாலின் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
