காரில் செல்லும் போது சீமானின் பேட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: X Post I Archive I X Post I Archive

மு.க.ஸ்டாலின் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து சீமானின் பேட்டியை பார்ப்பது போன்று வீடியோ உருவாக்கப்பட்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஓட்டுநர் ஒருவரே இதன் உண்மைத் தன்மையை அறிவார்..! ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு முப்பொழுதும் அண்ணன் மீது தான் சிந்தனை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையும் கூட பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் சீமான் பேட்டி மட்டும்தான் வீடியோவாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் அமர்ந்திருக்கும் காட்சி எல்லாம் புகைப்படமாகவே எந்த ஒரு அசைவும் இன்றி இருக்கிறது. இது மட்டுமல்ல மு.க.ஸ்டாலின் புத்தகம் படிப்பது போலவும் இந்த புகைப்படத்தை எடிட் செய்து சிலர் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த உண்மையான புகைப்படம் நமக்குக் கிடைத்தது. அதில் டேப்லெட் போன்ற சிறிய வகை கணினியைப் பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பதிவில், "#TNBreakfastScheme விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

Archive

எவ்வளவு குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்பட்டது, எவ்வளவு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவும் செயலியை அவர் பார்த்திருப்பதைச் சீமான் வீடியோவை பார்த்தது போன்று, புத்தகம் படித்தது போன்று எடிட் செய்து தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கம் திட்டத்தில் எவ்வளவு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த புகைப்படத்தை, சீமான் பேட்டியை பார்த்த ஸ்டாலின் என்று எடிட் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மு.க.ஸ்டாலின் காரில் சென்ற போது சீமானின் பேச்சைக் கேட்டாரா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered