மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி பெற்ற கடனை தள்ளுபடி செய்ததா எஸ்பிஐ?

அரசியல் | Politics இந்தியா | India பொருளாதாரம் I Economy

மும்பை விமான நிலையத்தை வாங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து அதானி பெற்ற ரூ.12,770 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடியுடன் அதானி இருக்கும் புகைப்படம், பாரத ஸ்டேட் வங்கி லோகோவுடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “மும்பை விமான நிலையம் வாங்கியதற்கு அதானியின் கடன் தொகை 12,770 கோடி ரூபாயை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Rajasait என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த 2021 ஜூலை மாதம் மும்பை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக உரிமையைப் பெற்றது அதானி குழுமம். பல ஆயிரம் கோடியில் மும்பை விமான நிலையத்தை மேம்படுத்த உள்ளதாக அதானி நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக கடனை பெற முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில், மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி குழுமம் எஸ்.பி.ஐ வங்கியில் கடன் வாங்கியிருந்தது என்றும், ஒரே வருடத்தில் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போன்று சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. 

முதலில் இப்படி ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால் அதானி பெற்ற வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதானி, மும்பை விமான நிலையம், எஸ்.பி.ஐ, 12,770 கோடி ருபாய் என்று ஆங்கிலத்தில் கீவார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது, சில தினங்களுக்கு முன்பு மும்பை அதானி விமான நிலையம் தொடர்பாக செய்தி வெளியானது நமக்குக் கிடைத்தது. 

முன்னணி நிதி, பொருளாதாரம் தொடர்பான செய்திகளை அளிக்கும் ஊடகங்கள் அதானியின் மும்பை விமானநிலையம் தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தன. அதில், 12,770 கோடி ரூபாய்க்கு எஸ்.பி.ஐ அன்டர்ரிட்டன் (underwritten) வழங்கியுள்ளது என்று இருந்தது. இந்த செய்தியை அதானி நிறுவனம் வெளியிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது அதானி குழுமம் வெளியிட்டிருந்த பத்திரிகை செய்தியும் நமக்குக் கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: adanienterprises.com I Archive

“Adani Group Achieves Financial Closure Of Navi Mumbai International Airport Project” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். வங்கிக் கடன் தள்ளுபடி என்பது ஒரு நிறுவனம் நிதி சிக்கலில் இருப்பதைக் காட்டும். யாரும் தங்கள் நிறுவனம் நிதி சிக்கலில் இருக்கிறது என்பதை பெருமையாகக் கூறிக்கொள்ளமாட்டார்கள். அதானி குழுமம் வெளியிட்டிருந்த செய்தியில் எந்த இடத்திலும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று குறிப்பிடும் வகையில் ரைட் ஆஃப் (Write-off) என்று இல்லை.

அந்த செய்திக் குறிப்பில், “நவி மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட்க்கு தேவையான ரூ.12,770 கோடிக்கு அன்டர்ரிட்டனை எஸ்பிஐ வழங்கியுள்ளது. விமான பயணிகளுக்கு சர்வதேச கட்டமைப்பு மற்றும் சேவையை வழங்க வேண்டும் என்று அதானி குழுமத்தின் விரும்புகிறது. இந்த சாதனை நடவடிக்கையின் மூலம் அதானி குழுமம் தேவையான வளங்களை முழுமையாக, நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பெற முடியும்” என்று குறிப்பிட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: dictionary.cambridge.org

அன்டர் ரிட்டன் என்றால் என்ன என்று கூகுளில் தேடிய போது, ஒரு நிறுவனத்துக்கு மற்றொரு நிதி அல்லது காப்பீடு நிறுவனம் வழங்கும் பொறுப்பு ஏற்பு உறுதி மொழி என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக நாணய விகடன் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர் நண்பர்களை தொடர்புகொண்டு கேட்டோம். ‘’அன்டர் ரிட்டர்ன் என்றால் கடன் உத்தரவாதம் என்று எடுத்துக்கொள்ளலாம். வேறு ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவோம் அல்லவா, அது போலத்தான்,’’ என்றனர். 

இது தொடர்பாக பொருளாதார பேராசிரியர் ஒருவரின் அலைபேசி எண்ணைக் கொடுத்து, கூடுதல் தகவலை கேட்டுக்கொள்ளும்படி கூறினர். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “இது வங்கி அளிக்கும் உத்தரவாதம். அதானி நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்தில் கடன் வாங்க திட்டமிட்டிருக்கலாம். அதற்கு அந்த நிறுவனம் உத்தரவாதம் கேட்டிருக்கும். எஸ்பிஐ வங்கி மும்பை விமான நிலைய திட்டத்திற்கு ரூ.12,770 கோடி உத்தரவாதம் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் அவர்கள் (அதானி) கடன் வாங்குவார்கள். 

எங்கு கடன் வாங்கப் போகிறார்கள் என்ற விவரத்தை அதானி நிறுவனம் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கவில்லை. எதிர்காலத்தில் பிரச்னை வந்தால், அதானி குழுமத்தால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் கடன் கொடுத்த நிறுவனம் எஸ்பிஐ வங்கியிடம் கேட்கும். ஏனெனில், ஜாமீன் கொடுப்பது எஸ்பிஐ தரப்புதான் ” என்றார்.

underwritten-க்கும் Write-off-க்கும் சரியான அர்த்தம் தெரியாத காரணத்தால் எஸ்.பி.ஐ அளித்த கடன் உத்தரவாதத்தை கடன் தள்ளுபடி என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி நிறுவனம் பெற்ற கடனை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி பெற்ற கடனை தள்ளுபடி செய்ததா எஸ்பிஐ?

Fact Check By: Chendur Pandian 

Result: False