அதானிக்காக ஊழல் கதவுகளையே அகற்றிவிட்டேன் என்று மோடி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளை அடைத்துவிட்டேன், தற்போது,  அதானிக்காக ஊழல் கதவுகளை அகற்றிவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன்: பிரதமர் மோடி. பிறகு அதானிக்கான 9 வருடங்களில் ஊழல் கதவுகளை திறந்துவிட்டேன். இப்பொழுது அதானிக்காக கதவுகளை அகற்றிவிட்டேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Pathy Lakshman என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த நியூஸ் கார்டை 2023 ஏப்ரல் 30ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சி ஊழல் செய்வதற்கு தடையாக ஊழல் கதவுகளை மூடிவிட்டேன் என்றும், அதே நேரத்தில் அதானி முறைகேடுகள் செய்வதற்கு வசதியாக ஊழல் கதவுகளை அகற்றிவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. மீம் தயாரிக்க முயற்சி செய்தது போல உள்ளது. ஆனால், இது மீம் என்று தெளிவாகத் தெரியாமல் உண்மையில் மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டு போலப் பகிர்ந்துள்ளனர். இதை ஏராளமானவர்கள் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் மோடி என்ன பேசினார் என்று அறிய மோடி பேசிய வீடியோவை தேடி எடுத்தோம். அவர் இந்தியில் பேசியிருந்தார். ஆங்கில ஊடகங்களில் அவரது பேச்சு தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. அதில் அவர் அதானி பற்றி எதையும் குறிப்பிடவில்லை என்பது தெரிந்தது. 

இது தொடர்பாக மாலை மலர் வெளியிட்ட செய்தியையும் தேடி எடுத்தோம். அதில் மோடி, “காங்கிரஸ் கணக்கு ஊழல் காலத்தை கொண்டது. காங்கிரஸ் என்றாலே ஊழல் தான். காங்கிரஸ்க்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன். பா.ஜனதா கணக்கில் அம்ரித் காலம் இடம் பெற்றுள்ளது. ஊழல் கதவுகள் மூடப்பட்டதால் காங்கிரஸ் கவலை அடைந்துள்ளது. அதனால் அவர்கள் மோடிக்கு கல்லறை கட்டுவதாக கூச்சல் போடுகிறார்கள்” என்று பேசியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I maalaimalar.com I Archive

அடுத்ததாக மாலைமலர் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை அதன் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்தோம். அதில், “காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன்” பிரதமர் மோடி” என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் மாலை மலர் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை விஷமத்தனமாக எடிட் செய்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. 

முடிவு:

மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து, அதானிக்காக ஊழல் கதவை அகற்றிவிட்டேன் என்று மோடி கூறியதாக தவறாக சேர்த்து சமூக ஊடகங்களில் பரவியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அதானிக்காக ஊழல் கதவுகளையே அகற்றிவிட்டேன் என்று மோடி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply