கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் வாங்க தன்னுடைய ஐ.பி.எல் சம்பளம் ரூ.15 கோடியை எம்.எஸ்.தோனி வழங்கினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

எம்.எஸ்.தோனியின் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தனது ஐபிஎல் முழு சம்பளத்தையும்15கோடி யை ஆக்ஸிஜன் வாங்குவதற்கு மட்டுமே வழங்கிய #எம்எஸ்_தோனி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல" என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை Mylai Rama என்பவர் 2021 மே 6ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

கொரோனா 2ம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. நிலைமையை சமாளிக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் அரசுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐ.பி.எல் சம்பளம் ரூ.15 கோடியை கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்க வழங்கினார் என்று பலரும் பதிவிட்டு வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

எம்.எஸ்.தோனி இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிட்டுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், ஐ.பி.எல் சம்பளம் 15 கோடி ரூபாயை வழங்குவதாக தோனி அறிவித்ததாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவரது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது போன்ற செய்திகளே கிடைத்தன. எம்.எஸ்.தோனி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது தொடர்பான அவரது பேட்டி அல்லது சமூக ஊடக பதிவு ஏதாவது வெளியாகி இருக்கும். ஆனால், அவர் 15 கோடி ரூபாய் வழங்குவதாக ஒரு துண்டு செய்தி கூட கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: sportzwiki.com I Archive

2020ம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய நிலையில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தோனி ரூ.1 லட்சம் வழங்கியிருந்தார். அதன் பிறகு அவர் நிதி உதவி செய்ததாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தோனி ஒரு லட்ச ரூபாய்தான் வழங்கினார் என்று பலரும் அவரை கிண்டல் செய்யவே, கொரோனா பரவல் உள்ள இந்த நேரத்திலா தவறான செய்தியை வெளியிடுவது என்று தோனியின் மனைவி சாக்‌ஷி கண்டனம் தெரிவித்திருந்தார்.

Archive

கடைசியாக கடந்த மே 9, 2021 அன்று பிரபலங்கள் அளித்த கொரோனா நிதி உதவி என்று அவுட் லுக் இதழின் இணையத்தில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி ரூ.2 கோடி நிவாரண நிதி வழங்கியதாகவும் 7 கோடி ரூபாய் அளவுக்கு நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தோனி ஒரு லட்ச ரூபாய் வழங்கினார் என்று மட்டுமே அதில் கூறப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: outlookindia.com I Archive 1 I republicworld.com I Archive 2

இதன் மூலம் எம்.எஸ்.தோனி கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்க தன்னுடைய ஐ.பி.எல் சம்பளம் ரூ.15 கோடியை வழங்கினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. அவர் எதிர்காலத்தில் நிதி உதவி செய்யலாம், பதிவாளர் குறிப்பிட்டது போன்று 15 கோடி ரூபாயைக் கூட வழங்கலாம். ஆனால் இந்த கட்டுரை பதிவிடப்படும் வரை அவர் வழங்கவில்லை என்பதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எம்.எஸ்.தோனி ஐ.பி.எல் சம்பளம் ரூ.15 கோடியை கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்க வழங்கினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஆக்சிஜன் வாங்க ரூ.15 கோடி வழங்கினாரா எம்.எஸ்.தோனி?

Fact Check By: Chendur Pandian

Result: False