FactCheck: பாஜக பெண் நிர்வாகியை பலாத்காரம் செய்து கொன்றனரா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’மேற்கு வங்கத்தில் பாஜக மகளிர் பிரிவு நிர்வாகியை பலாத்காரம் செய்து, கொலை செய்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’இன்னும் எத்தனை பேரை தான் இழக்க போகிறோம் 😢😢😢

மேற்குவங்க பாஜக மகளீரணி நிர்வாகி சகோதரி “சரஸ்வதி ஜனா” திரிணாமுல் காங்கிரஸ் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார் 😡😡😡

பேயாட்டம் ஆடும் மமதையின் காட்டாட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் 💪💪💪😡😡😡

#Justice_for_saswati_jana  ✊✊✊,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

Screenshot: various fb posts with similar caption

உண்மை அறிவோம்:
மேற்கு வங்கம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருவதாக, ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் மற்றும் புகைப்படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதுபற்றி நமது மலையாளம் மற்றும் மேற்கு வங்கம் பிரிவினர் காரக்பூர் பகுதி ஏஎஸ்பி ராணா முகர்ஜியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அவர் இந்த தகவல் தவறு என்று கூறியதோடு, இதுதொடர்பாக விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, ‘’குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான். ஆனால், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். அவருக்கு அநீதி இழைத்த கும்பலும் கட்சி எதுவும் சார்ந்தவர்கள் இல்லை. ஜாதி, மதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக, இந்த சம்பவம் நடைபெறவில்லை. அந்த பெண் வசித்த பகுதி மேற்கு மிட்னாபூர் மாவட்டம், பிங்காலா (Pingala) காவல் நிலையத்திற்கு உட்பட்டதாகும். அவரது வீட்டின் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்டை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களே (2 ஆண் மற்றும் 1 பெண்), அவரை இப்படி கொடூரமாகக் கொன்றுள்ளனர். முதலில், பலாத்காரம் செய்து, பின்னர் கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்ததன் பேரில், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். அதில், பலாத்காரம் செய்தது உறுதியாகியுள்ளது. இதன்பேரில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்திருக்கிறோம்,’’ என்று ஏஎஸ்பி ராணா முகர்ஜி கூறினார்.

FactCrescendo Malayalam Link

இது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட கொலை வழக்கு பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளிலும் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள, நமது குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் பதில் அளித்தால், அதனையும் இங்கே வெளியிட தயாராக உள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாஜக பெண் நிர்வாகியை பலாத்காரம் செய்து கொன்றனரா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False