எஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை? – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்

அரசியல் சமூக ஊடகம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

மூன்று பெண்கள் இறந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரி 3 பெண்கள் கற்பழித்து கொலை. இதை மறைப்பதற்கு சினிமா பைத்தியங்களை வைத்து நேசமணி கூத்தாடி வடிவேலு கதையைப் பரப்பிவிட்டுள்ளது வேதனை. எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக தற்கொலை செய்திகளை மறைக்கத்தான் நேசமணி ஹேஷ்டேகை டிரெண்ட் செய்கின்றனரா பத்திரிகையாளர்கள்?” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை, Saravanakumar Velusamy என்பவர் 2019 மே 31ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த மே மாதம் 26ம் தேதி, 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்த நாள், முதலாம் ஆண்டு படித்து வந்த ஜார்கண்டை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து இரண்டு பேர் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பினர். சமூக ஊடகங்களில் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்த அத்துமீறலை பத்திரிகையாளர்கள் மறைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இது தொடர்பாக மறைமலைநகர் போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, “ஒரு மாணவி, ஒரு மாணவர் என இரண்டுபேர் தற்கொலை செய்துள்ளனர். மூன்று மாணவிகள் மரணம் என்று சொல்வதே முட்டாள்தனம். யாரோ அடிப்படை உண்மை தெரியாத நபர், பரபரப்புக்காக இப்படி வதந்தியைப் பரப்பியுள்ளார். மாணவி தன் குடும்ப பிரச்னை காரணமாக தன்னுடைய தந்தைக்கு 6 பக்க கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துள்ளார். பொய்யான தகவலைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதன் அடிப்படையில் அந்த ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்திருந்தோம். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், மீண்டும் மூன்று பேர் இறந்து கிடக்கும் படத்தை வெளியிட்டு புதிதாக பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. கூடுதலாக அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SRM 1A.png

பதிவில் ஒரு இடத்தில் கொலை என்கிறார், இன்னொரு இடத்தில் தற்கொலை என்கிறார். என்ன சொல்ல வருகிறோம் என்ற புரிதல் அவருக்கே இல்லை என்பது தெரிந்தது. வதந்தியை பரப்ப வேண்டும் என்ற ஆசை… ஆர்வத்தை செய்தியை சரி பார்ப்பதில் செலவிட்டிருந்தால் பிரச்னையே வந்திருக்காது. படத்தில் உள்ள பெண்கள் யார் என்று ஆய்வை தொடங்கினோம். பதிவில் உள்ள புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

SRM 2.png

அப்போது, நெல்லை அருகே காதலன் கர்ப்பமாக்கி கைவிட்ட நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட செய்தி நமக்குக் கிடைத்தது. 2018 ஜனவரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் மூலம், வேறு ஒரு சம்பவத்தின் புகைப்படத்தை எடுத்து, எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ததாக விஷமத்தனமாக பதிவிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை? – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்

Fact Check By: Praveen Kumar 

Result: False

1 thought on “எஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை? – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்

Comments are closed.