வங்கதேசத்தில் ஏராளமான இந்துக்கள் கொலை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் ஆங்காங்கே உடல்கள், பொருட்கள் சிதறிக் கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவைவை எடுத்தவர் கதறி அழுகிறார். நிலைத் தகவலில், "பங்களாதேஷில் கிராமங்களில் சிதறிக் கிடக்கும், யாருக்கும் ஒரு தீங்கும் விளைவிக்காத இந்துக்களின் உடல்களைப் பாருங்கள்.

1921-ல் நம் நாட்டின் துரோகிகளான முஸ்லிம் தீவிரவாதிகள் கேரளத்தில் நடத்திய மாப்பிளா கலவர கொலைகளை காணாதவர்கள் இந்த வீடியோவில் நேரடியாக காணலாம். கான்கிராஸ்,திமுகவுக்கு ஓட்டுபோடும் தேசதுரோகிகளே திருந்துங்கடா.இந்நிலை இங்கும் வருவதற்கு எவ்வளவு நேரமாகும் யோசியுங்கள், கான்கிராஸ்,திமுகவை ஒழிப்போம்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், இதற்கு ஏதோ தி.மு.க, காங்கிரஸ் தான் காரணம் என்பது போலவும் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் இங்குள்ள குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறையில் இறங்க மறைமுகமாக அழைப்பு விடுப்பது போல பதிவு உள்ளது. உண்மையில் இந்த வீடியோ வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வின் பதிவா என்று அறிய ஆய்வு செய்தோம்.

முதலில் வீடியோவை முழுமையாக பார்க்கும் போது இறந்து கிடக்கும் சில பெண்களின் காண முடிகிறது. அவர்கள் இஸ்லாமியர்கள் அணிவது போன்று கருப்பு நிற பர்தா அணிந்திருந்தனர். எனவே, இந்த வீடியோவில் இருப்பவர்கள் இந்துக்கள் தானா என்ற சந்தேகம் எழுந்தது.

https://twitter.com/ro_sirajul/status/1820855642028142741

Archive

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்தியாவின் தீவிர வலதுசாரிகள் இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது மியான்மர் நாட்டில் வங்கதேசத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியாக்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 5, 2024 அன்று இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

Archived

இதன் அடிப்படையில் இது தொடர்பான அடிப்படை வார்த்தைகள் சிலவற்றைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது ரோஹிங்கியா மக்கள் மீது Arakan Army என்ற போராளிகள் குழு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. இந்த சம்பவம் ஆகஸ்ட் 5ம் தேதி நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

தொடர்ந்து தேடிய போது Rohingya Human Rights Initiative - R4R (ROHRIngya) என்ற ரோஹிங்கியா மனித உரிமை தொடர்பான குழுவும் இந்த வீடியோவை 2024 ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. இது தொடர்பாக வெளியான செய்திகளில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நிலப்பரப்பில் ஏராளமானோர் இறந்து கிடக்கும் காட்சியை காண முடிந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ ரோஹிங்கியா மீது நடந்த தாக்குல் என்பதை உறுதி செய்கின்றன.

உண்மைப் பதிவைக் காண: theguardian.com I Archive

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடையவே அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5ம் தேதி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தார். வங்கதேச எல்லைக்கு அருகே மியான்மர் நாட்டில் வைத்து ரோஹிங்கியாக்கள் மீது தாக்குதல் நடந்திருப்பதாக வீடியோக்கள், செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. வங்கதேச கிராமங்களில் இப்படி ஏராளமான இந்துக்கள் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக எந்த ஒரு செய்தியும், வீடியோவும் இதுவரை வெளியாகவில்லை.

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவை கொஞ்சமும் இரக்கமில்லாமல் இஸ்லாமியர்கள் எப்படி இந்துக்களை கொலை செய்து வீசியுள்ளார்கள் பாருங்கள் என்று பகிர்ந்திருப்பது என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வீடியோவை எடுத்து, வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டதாக தூண்டும் நோக்கில் தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவை வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்ட காட்சி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேச கிராமங்களில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False