
உத்தரகாண்டில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அரசு அலுவலகத்தை இளைஞர்கள் கைப்பற்றி கொண்டாடியது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்திரகாண்டில்… பாஜகவுக்கு எதிராக மாபெரும் கலவரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது போன்று புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வன்முறைக்கு காரணம் என்று கூறி சிலரை அந்த மாநில காவல் துறையினர் கைது செய்தனர். அரசுக்கு எதிராக கலவரம் நடந்ததாக எந்த செய்தியும் இல்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலும் எந்த இடத்தில் கலவரம் ஏற்பட்டது என்று குறிப்பிடவில்லை. எனவே, பதிவில் உள்ள புகைப்படத்தை வைத்து தகவல் கிடைக்கிறதா என்று பார்த்தோம்.
புகைப்படத்தில் உள்ள கட்டிடத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் பார்த்தோம். நேபாள மொழியில் எழுதப்பட்டுள்ளதாகக் கூகுள் டிரான்ஸ்லேட்டர் கூறியது. மேலும் அதில், “மாவட்ட நிர்வாக அலுவலகம், சிட்வான் (District Administration Office, Chitwan) என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். சிட்வான் என்பது நேபாள நாட்டில் உள்ளதாகத் தெரியவந்தது.
இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் லடாக் கலவரம் என்று குறிப்பிட்டு இந்த புகைப்பட காட்சி இடம் பெற்றிருந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடியபோது, நேபாளத்தில் ஜென் Z போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக பல வீடியோ பதிவுகள் நமக்குக் கிடைத்தன. அதில் நேபாள நாட்டின் கொடியுடன் போராட்டம் நடத்தியிருந்ததைக் காண முடிந்தது. வசதியாக நேபாள கொடியை நீக்கிவிட்டு இந்தியாவில் நடந்தது போன்று பதிவிட்டிருப்பது தெளிவானது.

நேபாளத்தில் சிட்வான் மாவட்ட நிர்வாக அலுவலகத்தின் கூகுள் மேப், ஸ்ட்ரீட் வியூ புகைப்படம் ஏதும் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தோம். அந்த கட்டிடத்தின் புகைப்படம் நமக்கு கிடைத்தது. அதுவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்திலிருந்த கட்டிடமும் ஒன்று என்பது இதன் மூலம் உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரகாண்டில் கலவரம் என்று பரவும் புகைப்படம் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
நேபாள போராட்ட புகைப்படத்தை உத்திரகாண்டில் பாஜக-வுக்கு எதிரான போராட்டம் என்று தவறாக பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:உத்தரகாண்டில் பாஜக-வுக்கு எதிராக கலவரம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
