
நாட்டைவிட்டு ஓடும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னை வற்புறுத்தியதால்தான் இந்தியாவை விட்டு வெளியேறினேன் என்று நீரவ் மோடி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நீரவ் மோடி வாக்குமூலம் என்று ஆங்கிலத்தில் வெளியான பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “நானாக சுயமாக இந்தியாவை விட்டு தப்பித்து ஓட வில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் என்னை நாட்டை விட்டு ஓடிப்போக வற்புறுத்தினார்கள். வங்கியில் வாங்கிய கடன் முழுவதையும் நானாக எடுத்துக் கொள்ள வில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கமிஷனாக 456 கோடி எடுத்துக் கொண்டார்கள். அந்த 13000 கோடியிலும் எனக்கு கிடைத்தது 32% மட்டுமே. மீதி காங்கிரஸ் தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள். … லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாக்குமூலம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உத்தரவாதம் பெற்று ரூ.11,500 கோடி அளவுக்குப் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மோசடி செய்ததாக 2018ம் ஆண்டு தகவல் வெளியானது. இதற்குள்ளாக அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை மீட்க இந்திய அரசும் போராடி வருகிறது. ஆனால், நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை இங்கிலாந்து நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகிறது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார் என்று அரசு தரப்பில் கூறப்படுவதால் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில் ரூ.11,500 கோடி மோசடியில் ரூ.456 கோடியை பாஜக தலைவர்களுக்கு கொடுத்துவிட்டு தான் நாட்டைவிட்டு வெளியேறினேன் என்று நீரவ் மோடி வாக்குமூலம் அளித்ததாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. அதே போல், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ரூ.456 கோடி கொடுத்துவிட்டு தான் வெளியேறினேன் என்று நீரவ் மோடி கூறியதாக மற்றொரு தரப்பினர் வதந்தி பரப்பினர். இது தொடர்பாக 2019ம் ஆண்டிலேயே ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஃபேக்ட் செக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது தன்னை நாட்டைவிட்டு ஓடும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வற்புறுத்தினார்கள் என்றும் தான் மோசடி செய்த ரூ.11,500 கோடியில் 68 சதவிகித பணத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு அளித்ததாகவும் லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாக்குமூலம் அளித்தார் என்றும் சிலர் கூடுதல் தகவலைச் சேர்த்து வதந்தி பரப்பி வருகின்றனர்.
நீரவ் மோடி மோசடி 2018ம் ஆண்டு வெளிப்பட்டது. அப்போது மத்தியில் பாஜக தலைமையிலான அரசு தான் ஆட்சி செய்து வந்தது. எதிர்க்கட்சி மிரட்டலுக்கு எல்லாம் பயந்து யாரும் தப்ப மாட்டார்கள். அடுத்ததாக, மோசடி செய்ததை நீரவ் மோடியே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததாக இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தால் அதை அடிப்படையாக வைத்தே அவரை நாடுகடத்தக் கேட்க முடியும். ஆனால் நீரவ் மோடியோ தான் எந்த தவறும் செய்யவில்லை என்றே லண்டன் நீதிமன்றத்தில் வாதாடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்றாவதாக இது வரை காங்கிரஸ் தலைவர்களுக்கு 456 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலும் கூட அந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று மொத்த பணத்தில் 32 சதவிகிதம் மட்டுமே நான் எடுத்தேன், மீதம் உள்ள 68 சதவிகிதத்தைக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் அளித்தேன் என்று நீரவ் மோடி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7800 கோடி ரூபாயைக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு வழங்கியதாக அவர் கூறியதாக குற்றச்சாட்டு உள்ளது. அவ்வளவு பணத்தைக் கொடுத்திருந்தால் பாஜக அரசு நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும். இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட தகவலை வதந்தியாகப் பரப்பியிருப்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive
2019ம் ஆண்டு நீரவ் மோடி கைது செய்யப்பட்ட போது அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாகக் கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு சம்மதம் இல்லை என்று நீரவ் மோடி கூறியதாகச் செய்தி வெளியாகி இருந்தது. ஆல்ட் நியூஸ் செய்தியாளரிடம் இதை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் லண்டன் செய்தியாளர் உறுதி செய்ததாக அப்போதே செய்தி வெளியாகி இருந்தது. மற்றபடி காங்கிரஸ், பாஜக தலைவர்களுக்குப் பணம் கொடுத்துவிட்டு தான் லண்டன் வந்தேன் என்று நீரவ் மோடி கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.
உண்மைப் பதிவைக் காண: cbi.gov.in I Archive
2022ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி சிபிஐ வெளியிட்டிருந்த பத்திரிக்கை செய்தியிலும் இப்படி நீரவ் மோடி வாக்குமூலம் அளித்ததாக குறிப்பிடப்படவில்லை. இப்படி அரசு தரப்பில் இருந்தோ ஊடகங்கள் தரப்பில் இருந்தோ இப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில், எதன் அடிப்படையில் நீரவ் மோடி வாக்குமூலம் அளித்தார் என்பது தெரியவில்லை. ஒருவேளை இப்படி ஒரு தகவல் இந்த தேதி, இந்த நாளிதழில் வெளியானது அல்லது அரசு இந்த தகவலை இந்த தேதியில் வெளியிட்டது என்று ஆதாரம் அளித்திருந்தால் அது பற்றி விசாரித்திருக்கலாம். ஆனால், அப்படி எந்த ஒரு தகவலையும் பதிவிட்டு வருபவர்கள் அளிக்கவில்லை.
சமீபத்தில் நீரவ் மோடி தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். 2024 மே மாதம் வெளியான செய்திதான் கிடைத்தது. அதில் நீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்று தான் குறிப்பிடப்பட்டிருந்தது. நம்முடைய தேடுதலில் இந்த வதந்தி தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான கட்டுரையும் கிடைத்தது.
2019ம் ஆண்டில் இருந்தே நீரவ் மோடி தொடர்பான வதந்தி பரப்பப்பட்டு வந்துள்ளது. நீரவ் மோடி அப்படி வாக்குமூலம் அளித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை நீரவ் மோடி நீதிமன்றத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே பேசியதாகவும் அதுவும் நாடு கடத்துவது தொடர்பாக தனக்கு சம்மதம் இல்லை என்று அவர் கூறியதாக மட்டுமே செய்தி வெளியாகி உள்ளது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
நாட்டைவிட்டு தப்பி ஓடும்படி காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தினார்கள் என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியதால் நாட்டைவிட்டு ஓடினேன் என்று நீரவ் மோடி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
