
தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது மக்களவையில் காட்டமாக பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
இதை அடிப்படையாக வைத்து மீம்ஸ் உருவாக்கி சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் நிர்மலா சீதாராமன் தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவுகளை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதிய கல்விக் கொள்கை, பிஎம் ஶ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டின் கல்வித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்களை நோக்கி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கமிட்டி அமைத்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் பிஎம் ஶ்ரீ திட்டத்தில் சேர்கிறோம் என்று தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியதை பிஎம் ஶ்ரீ திட்டத்தில் சேர தமிழ்நாடு ஒப்புக் கொண்டது என்று விதண்டாவாதம் செய்து வருகின்றது மத்திய அரசு.
இந்த நிலையில், “தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது” என்று நிர்மலா சீதாராமன் கூறிவிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் அவர் திராவிடர் கழக தலைவர் ஒருவரின் கருத்து என்று மேற்கோள்காட்டிப் பேசியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் நிர்மலா சீதாராமனே அவ்வாறு கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
பாலிமர் தொலைக்காட்சியில் நிர்மலா சீதாராமன் அவ்வாறு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்று பார்த்தோம். ஆனால், தலைப்பு மாற்றப்பட்டிருந்தது. ‘மக்களவையில் காட்டமாக பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..! விடுதலை பத்திரிகையில் வெளியானதை மேற்கோள்காட்டி மக்களவையில் காட்டமாக பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
அதில், 1943ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வௌியான விடுதலை நாளிதழில் மரியாதைக்குரிய தலைவர் ஒருவர் தமிழ் பற்றி சொல்லியுள்ள கருத்தைப் பாருங்கள். அவர் சொல்கிறார். “தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது” என்கிறார். தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு இதற்காக செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஒரு அனுபவ புலவர் பாடியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார் என்கிறார்.
இந்த வீடியோவை நாடாளுமன்றத்தின் Sansad TV யூடியூப் பக்கத்திலிருந்து தேடி எடுத்தோம். வீடியோவின் ஒரு மணி நேரம் 10வது நிமிடத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு வருகிறது. இதன் மூலம் இது நிர்மலா சீதாராமன் கருத்து இல்லை என்பத உறுதி செய்யப்படுகிறது.
பெரியாரின் கருத்தா, வேறு ஒரு புலவரின் கருத்தா, பெரியார் ஏன் அப்படி சொன்னார் என்ற ஆய்வுக்குள் எல்லாம் நாம் செல்லவில்லை. தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று நிர்மலா சீதாராமன் கூறவில்லை. விடுதலை நாளிதழில் ஒருவர் (பெரியார்) அப்படிக் கூறினார் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். விடுதலையில் வெளியான கருத்தை நிர்மலா சீதாராமனின் கருத்தாக மாற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவலைப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
விடுதலை நாளிதழில் தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என தலைவர் ஒருவர் கூறியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டி பேசியதை, நிர்மலா சீதாராமன் கூறியதாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது” என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
