FACT CHECK: திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி நடத்திய தாக்குதல் படங்களா இவை?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முஸ்லீம்கள் மீது நடத்திய வன்முறை வெறியாட்ட படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இவை உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புத்தகம் எரிந்த நிலையில் அதை இருவர் தூக்கி வரும் புகைப்படம், சாலையில் கம்புகளைப் போட்டு எரிக்கும் படம், கார் ஒன்று தீவைத்து எரிக்கும் படம் என பல சில சிறு சிறு புகைப்படங்களை வைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “திரிபுராவில் RSS, விஷ்வ இந்து பரிஷத் இஸ்லாமியர்கள் மீது நடத்திய வன்முறை வெறியாட்ட படங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்பட பதிவை Newsu Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 அக்டோபர் 31ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்வினையாக இந்தியாவில் திரிபுராவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று சில படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் எல்லா படங்களும் தெளிவாக இல்லை. தெளிவாகத் தெரிந்த இரண்டு புகைப்படங்களை மட்டும் ஆய்வு செய்தோம்.

எரிந்த புத்தகங்களைச் சுமந்து வரும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் பல மாதங்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி இந்த புகைப்படத்தை Aasif Mujtaba என்ற நபர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பது தெரியவந்தது. அதில், டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீவிபத்தின் காட்சி என்று குறிப்பிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook 

வங்கதேச கலவரம் என்பது 2021ம் ஆண்டு நவராத்திரி காளி பூஜையின் போது ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திரிபுராவில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படமோ 2021 ஜூன் மாதம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கும் திரிபுரா வன்முறைக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.

அடுத்ததாக சாலையில் கட்டைகளைப் போட்டு எரிக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் 2019ம் ஆண்டு அஸ்ஸாம் மாநில தலைநகர் குவாஹாட்டியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த புகைப்படமும் திரிபுராவுடன் தொடர்புடையது இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive

மூன்றாவதாக கார் ஒன்று எரியும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது கடந்த செப்டம்பர் மாதம் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்ட போது கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது என்று செய்தி ஊடகங்களில் இந்த படத்தை பகிர்ந்திருந்தனர்.

அசல் பதிவைக் காண: eastmojo.com I Archive

இதன் மூலம் திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய வன்முறை வெறியாட்ட படங்கள் என்று பகிரப்படும் படங்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் திரிபுரா தாக்குதல் படம் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் காட்சிகள் என்று பகிரப்படும் படங்கள் வேறு பல நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்டவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி நடத்திய தாக்குதல் படங்களா இவை?

Fact Check By: Chendur Pandian 

Result: False