
அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் கூடிய சன் நியூஸ் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சசிகலா கழகத்தின் பொதுச்செயலாளராகப் பதவியேற்பதற்கு ஓபிஎஸ் ஆதரவு – நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கைக்கு சங்கு ஊதிய ஒ.பன்னீர்செல்வம்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, பி.கே.சக்திவேல் தி.மு.க. என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 பிப்ரவரி 11 அன்று பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து சசிகலா சென்னை திரும்பியுள்ளார். இந்த சூழலில் அ.தி.மு.க-வில் உள்ள பலரும் சசிகலா பக்கம் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அப்படி பெரிய நிர்வாகிகள், பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் சென்றதாக செய்தி எதுவும் வரவில்லை.
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தது போன்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் எப்படி ஆதரவு தெரிவிப்பார் என்ற சந்தேகத்துடன் அந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I toptamilnews.com I Archive 2
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில் சசிகலா அடுத்த பொதுச் செயலாராக வர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் வலியுறுத்தினர். எனவே, பழைய செய்தியை எடுத்து புதிது போல வெளியிட்டிருக்கலாம் என்று தெரிந்தது.
இது தொடர்பாக தேடிய போது சமீபத்தில் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழில் ஓ.பன்னீர்செல்வத்தின் 2016ம் ஆண்டு அறிக்கையை தற்போது வெளியிட்டிருப்பதும், அதை ஊடகங்கள் வெளியிட்டிருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக தேடிய போது டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியான அறிக்கையின் புகைப்படும் கிடைத்தது. அதில் மிகத் தெளிவாக தினமணி, 2016 டிசம்பர் 22, ஞாயிறு என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் தலைப்பு பகுதியிலேயே 2016 அன்று என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் சில, ஊடகங்கள் பரபரப்புக்காக அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்க ஓ.பி.எஸ் ஆதரவு என்று தலைப்பிட்டு வைத்திருப்பது தெரிந்தது. ஆனால் செய்தியின் உள்ளே விரிவாக இந்த அறிக்கை 2016ல் வெளியானது என்று குறிப்பிட்டு, ஓ.பி.எஸ் பற்றி சூசக தகவல் என்று தெரிவித்துள்ளனர்.

இதன் தலைப்பை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தியின் உள்ளே படித்தால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஃபேஸ்புக்கில் தலைப்பின் ஸ்கிரீன்ஷாட்டை மட்டும் பகிர்ந்திருப்பதால் உண்மை புரியாமல் குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது.
இதன் மூலம் 2016ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையை தற்போது வெளியிட்டு, தற்போதைய சூழலில் ஆதரவு தெரிவித்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில் தகவல் உண்மையானது என்றாலும் முழுமையானதாக இல்லை என்று உறுதியாகிறது.
முடிவு:
அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா வர வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையை தற்போது 2021ம் ஆண்டு வெளியிட்டது போல தவறாக பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் ஆதரவா?- புதியது போல பரவும் பழைய செய்தி
Fact Check By: Chendur PandianResult: Missing Context
