பருத்தி வயலில் பச்சைப் புழு கடித்து விவசாயிகள் மரணம் என்று பரவும் வதந்தி!

இந்தியா சமூக ஊடகம் விவசாயம்

கர்நாடகாவில் பருத்திச் செடியிலிருந்த புழு கடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வயலில் சிலர் இறந்து கிடக்கும் புகைப்படம் மற்றும் பச்சை நிற கம்பளி புழு ஆகியவற்றுடன் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பருத்தி வயலில் ஒரு பச்சை ஓட்டம் வருகிறது. கடித்த ஐந்தே நிமிடங்களில் இறந்து போனது. கர்நாடகாவில் நடந்தது. இது பாம்பை விட விஷ பூச்சி. வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் பகிரவும். குறிப்பாக விவசாயிகளுக்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Chellamuthu Annamalai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 செப்டம்பர் 20ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை ஆயிரக் கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பருத்திச் செடியில் உள்ள கம்பளி புழு கடித்து உயிரிழப்பு ஏற்பட்டது என்று பகிரப்பட்டு வருகிறது. விசாயிகளுக்கு இதை தெரியப்படுத்துங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏதோ விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட பதிவு போல் இருந்ததால் இதைப் பற்றி ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உயிரிழந்து கிடக்கும் நபர்களின் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இறந்தவர்களின் படங்களுடன் சில யூடியூப் பதிவுகள் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. அதில், மகாராஷ்டிராவில் ஜல்கான் என்ற மாவட்டத்தில் மின்னல் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோவை பல மராத்தி ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.

YouTube 1 I YouTube 2 

இதன் அடிப்படையில் மகாராஷ்டிரா, ஜல்கான், மின்னல், தந்தை – மகன் உயிரிழப்பு என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, மின்னல் தாக்கியதில் தந்தை – மகன் உயிரிழந்தார்கள் என்று படத்துடன் செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. இந்த புகைப்படத்தை வைத்து பருத்திச் செடியில் உள்ள கம்பளி புழு கடித்து விவசாயிகள் உயிரிழந்தார்கள் என்று வதந்தி பரப்பியது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: postsen.com I Archive 1 I maharashtratimes.com I Archive 2

இந்த கம்பளி புழு பற்றி அறிய தமிழ்நாட்டின் முன்னணி பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் ஒருவரைத் தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம், இது சாதாரண ஸ்லக் கேட்டபில்லர் (slug caterpillar). இது மனிதர்கள் மீது பட்டால் அதிகபட்சம் சருமம் தடித்தல் போன்ற அழற்சி ஏற்படலாம். அதிக ஒவ்வாமை பிரச்னை இருப்பவர்களுக்குக் கூட உடலில் பல பகுதிகளில் அழற்சி ஏற்படலாம். மற்றபடி இதனால் வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த புழுவால் உயிரிழப்பு எல்லாம் ஏற்படாது” என்றார்.

பேராசிரியர் கூறியதன் அடிப்படையில் கூகுளில் ஸ்லக் கேட்டப்பில்லர் என்று டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்ற பச்சை நிற கம்பளி புழு பற்றிய விவரம் கிடைத்தது. எதிலும் இந்த கம்பளி புழு காரணமாக உயிரிழப்பு ஏற்படும் என்று குறிப்பிடவில்லை. 

உண்மைப் பதிவைக் காண: poison.org I Archive 

நம்முடைய ஆய்வில், உயிரிழந்தவர்கள் கர்நாடகத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. இவர்கள் மகாராஷ்டிராவைச் சார்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் புழு கடித்ததால் உயிரிழக்கவில்லை, மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தில் உள்ளது ஸ்லக் கேட்டபில்லர் என்றும் அது மனிதர்கள் மீது பட்டால் அதிகபட்சம் சரும அழற்சி ஏற்படலாம் என்றும் பூச்சியியல் பேராசிரியர் நம்மிடம் உறுதி செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் படத்தை வைத்து கர்நாடகாவில் பருத்தி புழு கடித்து உயிரிழந்தனர் என்று வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பருத்தி வயலில் பச்சைப் புழு கடித்து விவசாயிகள் மரணம் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply