வங்கதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் கூட இந்து பெண்களை கட்டிவைத்துத் தாக்குகிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சில பெண்களை பல பெண்கள் சேர்ந்து கட்டிப்போடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பெண்களும் அரக்க குணம் படைத்தவர்கள் தான் என்று நிரூபித்த தருணம் பங்களாதேஷில் இந்து பெண்களை கட்டி வைத்து சித்தரவதை செய்யும் காட்சி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போராட்டத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக பல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்படி சமூக ஊடகங்களில் பரவும் பல தகவல்கள் வெறும் வதந்தி என்பது நம்முடைய ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வங்கதேசத்தில் இந்து பெண்களை இஸ்லாமிய பெண்கள் தாக்கினார்கள் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சமீப நாட்களில் பலரும் இந்து பெண்கள் தாக்கப்பட்டார்கள் என்று இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு பழைய பதிவுகளைத் தேடினோம். அப்போது ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்ததற்கு முன்பு இருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

ஜூலை 17, 2024 அன்று வங்க மொழியில் பதிவிடப்பட்டிருந்த எக்ஸ் தள பதிவு ஒன்றை பார்த்தோம். பத்ருன்னெஸ்ஸா கல்லூரியில் சாத்ரா லீக் தலைவர்களை மாணவிகள் தாக்கினர் என்று மொழிபெயர்ப்பு கூறியது. இதன் அடிப்படையில் சாத்ரா லீக் என்றால் என்ன என்று தேடிப் பார்த்தோம். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு அது என்பது தெரியவந்தது. அதாவது, ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் அணி நிர்வாகிகளை மற்ற மாணவர்கள் தாக்கியது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் இந்த வங்க மொழி பதிவை அப்படியே கூகுளில் பதிவிட்டு தேடிப் பார்த்தோம். அப்போது Dhaka Age என்ற வங்கதேச ஊடகம் ஒன்றில் வெளியான யூடியூப் பதிவு நமக்கு கிடைத்தது. அதிலும் சாத்ரா லீக் தலைவர்கள் தாக்கப்பட்ட வீடியோ வைரல் ஆனது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: jagonews24.com I Archive

தொடர்ந்து தேடிய போது இந்த சம்பவம் தொடர்பாக வங்கதேச ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியும் நமக்கு கிடைத்தது. அதை மொழிபெயர்த்து படித்துப் பார்த்தோம். பக்‌ஷி பசார் (Bakshi bazar) பகுதியில் உள்ள பேகம் பத்ருன்னெஸ்ஸா அரசு மகளிர் கல்லூரியில் சாத்ரா லீக் தொண்டர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஜூலை 17, 2024 அன்று நடந்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவை எல்லாம் இந்த மாணவிகள் இந்து மாணவிகள் இல்லை என்பதையும் தற்போது நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு எல்லாம் முன்பே இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பதையும் உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வங்கதேசத்தில் இந்து பெண்களை இஸ்லாமிய பெண்கள் தாக்கினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சியின் மாணவர் அணி நிர்வாகிகளை கல்லூரி மாணவிகள் தாக்கிய பழைய வீடியோவை எடுத்து, வங்கதேசத்தில் இந்து பெண்களை இஸ்லாமிய பெண்களே தாக்குகின்றனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘வங்கதேசத்தில் இந்து பெண்களை கட்டிவைத்து சித்ரவதை செய்த இஸ்லாமியப் பெண்கள்’ என்ற வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False