
‘’பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த வீடியோ பதிவில், ‘’ #பல்லடத்தில் கூட்டத்தின் நடுவே காலி சேர் விற்பனை செய்த வடமாநிலத்தவர்… 😄😂😂
ஆள் பிடிக்கும் தொழில் தோல்வியில் அமைந்தது போல …,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுக்க பாத யாத்திரை மேற்கொண்டார். அதன் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த பிப்ரவரி 27, 2024 அன்று நடைபெற்றது. இதனையடுத்து, பல்லடத்தில் பாஜக தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று அண்ணாமலையை வாழ்த்தி பேசியிருந்தார்.
இந்த பொதுக்கூட்டம் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவும்.
ஏனெனில், பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் மாலை நேரத்தில் நடைபெற்றது; இரவில் அல்ல.

இதுதொடர்பான ஏராளமான வீடியோ பதிவுகள் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பல்லடத்தில் பொதுக்கூட்டம் முடிந்ததும், உடனடியாக அன்றைய இரவே மதுரை சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற தொழில்முனைவோர் மாநாடு ஒன்றில் பங்கேற்று பேசினார். அவருடன் அண்ணாமலையும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்தப்படியாக, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றார்.
மேலும், பல்லடம் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை தாடி நிறைந்த முகத்துடனே காணப்பட்டார்.

ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பதிவு இரவு நேரத்தில் எடுக்கப்பட்டதாக உள்ளது. அத்துடன், அண்ணாமலை பேசும் காட்சி திரை மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுவதைக் காண முடிகிறது. அதில், அவர் தாடி ஏதுமின்றி, ஷேவ் செய்த முகத்துடன் காணப்படுகிறார்.

இந்த வீடியோ, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகும். இதுதொடர்பாக, ஏற்கனவே வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம்.
ஊடகங்களிலும் இதுபற்றி செய்தி வெளியாகியுள்ளது.
NewsTamil 24X7 Link l Dinamalar Link l Chanakyaa Link
இதேபோன்று, பல்லடத்தில் பிரதமர் மோடி பேசியபோது காலி இருக்கைகள் நிறைய காணப்பட்டதாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
இதுவும் தவறான வீடியோ தகவல்தான். கடந்த ஜனவரி மாதம் திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோதான் இது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகள்’ என்று பகிரப்படும் பழைய வீடியோ…
Fact Check By: Fact Crescendo TeamResult: Misleading
