
தி.மு.க ஸ்டாலின் ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரில் பைக் ஓட்டிக்கொண்டு ஒருவர் வர, திடீரென்று நிலை தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த பெண் மற்றும் குழந்தை கீழே விழுந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “திமுக ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் நிலைமை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “திமுக ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் நிலைமை இதுபோல தான் தங்கள் வீட்டு வாசலில் தங்களுடைய தெருவில் கண்ணுக்கு புலப்படாத எத்தனை தாய்மார்கள் பொதுமக்கள் இதுபோன்று அவதிப்படுகிறார்கள் இதுபோல பல வகையான சிரமங்களுக்கு ஆளாகிறார்கள் இதற்கு திமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடிகளுக்கு மேல் பொது மக்களின் வரிப் பணத்தை வீணடித்தும் பயனில்லாத மனசாட்சி இல்லாத இந்த ஸ்டாலின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் தயாராகி விட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னையில் அக்டோபர் மத்தியில் மழை ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து சாலையில் மழை நீர் தேங்கியிருக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சாலையில் மழை நீர் வடிகால் வேலை நடந்துகொண்டிருக்கும் சூழலில் மழை நீரில் வாகனம் ஓட்டிச் செல்லும் படத்தை எல்லாம் பகிர்ந்து ரூ.4000 கோடி எங்கே போனது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மழை வெள்ள நீரில் பைக்கில் குடும்பத்துடன் வந்த ஒருவர் தடுமாறி விழுந்த வீடியோவை சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்து பார்த்தோம். வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த (2025) ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
கராச்சி கண்டிஷன் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பலரும் 2025 ஆகஸ்டில் பதிவிட்டிருந்தனர். கராச்சியின் மோசமான நிலை என்று குறிப்பிட்டு பலரும் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. பாகிஸ்தான் ஊடகங்களிலும் கூட இந்த வீடியோவுடன் செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ சமீபத்தில் ஏற்பட்டுள்ள சென்னை மழை பாதிப்புடன் தொடர்புடையது இல்லை என்பது உறுதியானது.
தொடர்ந்து தேடியபோது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த வீடியோ தொடர்பான ஃபேக்ட் செக் கட்டுரை வெளியாகி இருந்தது தெரியவந்தது. அதிலும் இந்த வீடியோ பாகிஸ்தானைச் சார்ந்தது என்று உறுதி செய்திருந்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் சாலையில் மழை நீர் தேங்கியதாக பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கராச்சி சாலையில் மழை நீர் தேங்கிய வீடியோவை தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் சாலையில் நிலை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:தி.மு.க ஆட்சியில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


