FACT CHECK: வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இஸ்கான் துறவி என்று பகிரப்படும் படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் சர்வதேசம்

வங்கதேச இஸ்கான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட துறவி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

எரிந்த நிலையில் இருக்கும் சிலை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேசில் எரிக்கப்பட்ட இஸ்கான் துறவி…. அந்த மரணவலியை பொறுத்துக்கொண்டு இறைவனை நினைத்து அமர்ந்திருக்கிறார்…. எந்தளவுக்கு என்றால்.. எத்தனை தாக்குதல் தந்தாலும்… தாங்கள் வணங்கும் இறையியலை எவ்வளவு கேவலப்படுத்தினாலும்… எந்த எதிர்வினை தெரிவாக்காமல் இந்துக்கள் அமர்ந்திருப்பதுப்போல… ஆனாலும் இந்துக்களை மதவெறியர்கள், காட்டுமிராண்டிகளென்று ஓயாமல் குற்றம்சாட்டத்தான் செய்கின்றனர்…. ஆனால் அந்தக்கூட்டம் இதை காட்டுமிராண்டித்தனமென்று கண்டிப்பதில்லை…. ஏன்.. 

இப்பொழுதே இந்தளவுக்கு நடக்கிறது என்றால் ஆயிரம் வருடங்களாக ஏந்தளவுக்கு காட்டுமிராண்டித்தனத்தை ஏவியிருப்பார்கள்… ஆனால் அவர்களால்தான் பாரதம் சிறப்புற்றதென்று நம்மையே நம்பவைத்தது நேருவிய மதசார்பிண்மை!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Anbuvel Sekarji என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 அக்டோபர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் அமைப்புக்குச் சொந்தமான கோயில் மீது இஸ்லாமியர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு இஸ்கான் பக்தர்கள் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒருவர் உடல் கோயிலுக்கு அருகே இருந்த குளத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று படங்கள் வெளியாகின. மற்றொருவர் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தாக்குதலில் இறந்த இரண்டு பேரும் தீ வைத்து எரிக்கப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. அவர்கள் அடித்து உதைத்துக் கொல்லப்பட்டதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், தீ வைத்து எரிக்கப்பட்ட இஸ்கான் துறவி என்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படவே அது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, சில ஊடகங்களில் இந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. வங்கதேச இஸ்கான் தாக்குதல் பற்றிய செய்தியில் இந்த புகைப்படத்தைப் பயன்படுத்தியிருந்தனர். ஆனால், இந்த சிலை தீ வைக்கப்பட்டது தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

பல்வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்குப் பிறகு இந்த புகைப்படத்தை வங்கதேசத்திற்கான இஸ்கான் அமைப்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், வங்கதேசத்துக்கான இஸ்கான் அமைப்பின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டிருந்ததால், நம்மால் அதை கண்டறிய முடியவில்லை. அதே நேரத்தில் பலரும் வங்கதேசத்துக்கான இஸ்கான் அமைப்பின் ட்வீட் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. 

அசல் பதிவைக் காண: Facebook I republicworld.com I Archive

அதில், “அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவிய பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் சிலையை வங்கதேசம் நவகாளியில் எரித்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

ரிபப்ளிக் ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியிலும் இஸ்கான் அமைப்பை நிறுவிய பக்திவேதாந்த சுவாமியின் சிலையை வன்முறையாளர்கள் தீவைத்து எரித்தனர் என்று வங்கதேச இஸ்கான் அமைப்பின் தலைவர் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive

இஸ்கான் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் இந்த சிலை சரிந்து கிடப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் இஸ்கான் அமைப்பை நிறுவிய பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் சிலையை உயிருள்ள துறவி என்று அர்த்தம் வரும் வகையில் தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்கான் நிறுவனர் சிலையை, உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட இஸ்கான் துறவி என்று ஃபேஸ்புக்கில் விஷமத்தனமாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இஸ்கான் துறவி என்று பகிரப்படும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading