தி.மு.க ஆட்சியில் அந்நிய முதலீடு கொண்டு வந்து தயாரிக்கப்பட்ட பஸ் என்று ஒரு உடைந்த பேருந்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பின்புறம் உடைந்த நிலையில், கயிறு வைத்து கட்டப்பட்டிருக்கும் அரசு பேருந்தின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து குவிந்த அந்நிய முதலீடுகளைக் கொண்டு தமிழகத்தில் தயாரான அதிநவீன பறக்கும் பாராசூட் பேருந்துகள். பறக்கும்போது நடுவழியில் பெட்ரோல் தீர்ந்தால் நிரப்பிக்கொள்ள ஏதுவாக வானத்தில் மிதக்கும் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல். முதற்கட்ட சோதனை ஓட்டப் பேருந்து நாமக்கல்லில் இருந்து ஹாங்காங் பறக்கத் தயாரானபோது.." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எல்லா ஆட்சியிலும் உடைந்த பேருந்துகள் இயக்கப்பட்டதாகச் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வந்துள்ள நிலையில், அதை விமர்சித்து ஹாங்காங் நோக்கி செல்ல தயாரான பஸ் என்று தமிழ்நாடு அரசை நையாண்டி செய்து பதிவிடப்பட்டுள்ளது. இந்த பஸ் படத்தை பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பார்த்து வருகிறோம். எனவே, இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா அல்லது முந்தைய ஆட்சிக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: Facebook

புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே இந்த பேருந்தின் புகைப்படத்தை வைத்து அ.தி.மு.க அரசை நையாண்டி செய்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.


உண்மைப் பதிவைக் காண: minnambalam.com I Archive

தொடர்ந்து தேடிய போது தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், "இந்த புகைப்படம் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது. பேருந்தின் பின்பக்க பம்பர் உடைந்ததால் கயிற்றால் கட்டப்பட்டது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்பேருந்தின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

முதலீடுகளை ஈர்த்து வந்தவர் என்று இப்போது குறிப்பிடுவதன் மூலம் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை விமர்சிப்பது தெளிவாகிறது. மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் தான் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 2011ம் ஆண்டு மே மாதம் முதல் 2021 மே மாதம் வரை தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நடந்து வந்தது. இந்த உடைந்த பஸ் புகைப்படம் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா அல்லது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அரசு ஆட்சியிலிருந்திருக்கலாம். எனவே, இந்த புகைப்படத்துக்கும் திமுக - மு.க.ஸ்டாலின் அரசுக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.

இந்த ஆட்சியில் உடைந்த பஸ்கள் இயக்கப்படவே இல்லை என்று கூறவில்லை. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் பதிவிட்டவர் குற்றம்சாட்டியது போல இப்போதுள்ள திமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது மட்டும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2016ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்த போது எடுக்கப்பட்ட உடைந்த அரசு பேருந்தின் புகைப்படத்தை திமுக ஆட்சியில் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Claim Review :   தி.மு.க ஆட்சியில் அந்நிய முதலீடு கொண்டு வந்து தயாரிக்கப்பட்ட பஸ் என்று ஒரு உடைந்த பேருந்தின் புகைப்படம் உண்மையா?
Claimed By :  Social Media Users