ரவுடியை தைரியமாகப் பிடித்த யோகி மாடல் போலீஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?
உத்தரப்பிரதேச மார்க்கெட்டில் கத்தி காட்டி மிரட்டிய ரவுடியை மடக்கிப் பிடித்த யோகி ஆதித்யநாத்தின் போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கையில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த நபரை காவலர் ஒருவர் லாவகமாகத் தாக்கி கத்தியைத் தட்டிவிட்ட மற்ற காவலர்கள் ஒன்று சேர்ந்து அடித்து துவைக்கின்றனர்.
நிலைத் தகவலில், "உத்திரபிரதேசம் மாநிலம் சாஹரன்பூர் நகரின் சண்டே மார்க்கெட்டில் அந்த ஊரைச் சேர்ந்த ரவுடி அப்துல் கஃபார் என்பவன் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்த பொழுது, உத்திர பிரதேச போலீஸ் எடுத்த செல்லமான நடவடிக்கை.... இது நம்மூர் மாதிரி கஞ்சா கம்பெனி மாடல் இல்லை..... அதிரடி நாயகனும் பாரத தேசத்தின் அடுத்த பிரதமருமான யோகிஜி மாடல்.... How is it..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை திறமையானது என்றும் தமிழ்நாட்டின் காவல் துறை திறமையற்றதாக உள்ளது என்றும் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் குற்றம்சாட்டி இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். கைது செய்ய வந்த டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களை சுட்டுக் கொன்ற விகாஸ் தூபே எந்த மாநிலத்தைச் சார்ந்தவர் என்று தெரியாமல் பதிவிட்டுள்ளனர். அந்த விவகாரத்துக்குள் செல்லவில்லை.
இந்த வீடியோ உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் தேடி பார்த்தோம். அப்போது, இந்த வீடியோ 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் ரவுடி ஒருவர் கையில் கத்தியுடன் மிரட்டிக் கொண்டிருந்தார். அந்த நபரை போலீசார் சுட்டு பிடித்தனர் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நபரின் பெயர் என்ன என்று பார்த்தபோது இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் முகமது ஃபாசல் ஜஃபார் என்று குறிப்பிட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive
தொடர்ந்து தேடிய போது உத்தரப்பிரதேச காவல் துறை ஃபேக்ட் செக் இணையதளத்தில் இந்த சம்பவம் கர்நாடகாவில் 2023 பிப்ரவரி 5ம் தேதி நடந்தது என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது நமக்கு கிடைத்தது. 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடகாவில் பாஜக ஆட்சிதான் இருந்தது. 2023 மே 20ம் தேதி தான் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது.
நம்முடைய ஆய்வில் உத்தரப்பிரதேசத்தில் ரவுடியை சுட்டு பிடித்த யோகி ஆதித்யநாத் காவல்துறை என்று பரவும் வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கர்நாடகா போலீசார் ரவுடி சுட்டுப்பிடித்த வீடியோவை எடுத்து, உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் தைரியமான போலீஸ் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…