
அ.தி.மு.க நல்லாட்சி வழங்கிய அரசு, என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறையில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் ஸ்கிரீன்ஷாட்கள் பகிரப்பட்டுள்ளது. அதில், எல்லா விதத்திலும் அ.தி.மு.க முன்னிலை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Knr Sivara என்பவர் 2021 மார்ச் 3ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த தகவலைப் பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த ஸ்கிரீன்ஷாட்களை பார்க்கும்போது உண்மையானது போல உள்ளது. எனவே, போலியாக உருவாக்கியிருப்பார்கள் என்ற சந்தேகம் எழவில்லை. அதே நேரத்தில், புதிய தலைமுறையில் கடந்த மாதத்தில், வாரத்தில் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் எதுவும் வெளியிட்டதாக நினைவில் இல்லை.
பல போலி நியூஸ் கார்டுகள் தொடர்பாக தினமும் புதியதலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டுகளை பார்த்துக்கொண்டே வரும் நமக்கு இப்படி ஒரு செய்தி புதிய தலைமுறையில் வெளியானதாக நினைவில் இல்லை. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த கருத்துக்கணிப்பு புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதியதலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பு வீடியோவோடு இந்த காட்சிகள் ஒத்துப் போவதைக் காண முடிந்தது. அதைப் பார்த்தோம். இந்த தகவல் அதனுடன் ஒத்துப் போனது. இதன் மூலம் 2016ம் ஆண்டு வெளியிட்ட கருத்துக் கணிப்பை தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு போல வெளியிட்டிருப்பது உறுதியானது.

இது தொடர்பாக புதியதலைமுறை டிஜிட்டல் ஹெட் மனோஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், “இந்த தகவல் தவறானது. 2021 தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை புதியதலைமுறை இதுவரை வெளியிடவில்லை. இது பழைய கருத்துக் கணிப்பு” என்றார்.
நம்முடைய தேடலில் 2019ம் ஆண்டில் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்றும் கிடைத்தது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகான நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தனர். தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் மனநிலை மாறும். எனவே, பழைய கருத்துக் கணிப்பை எடுத்து இப்போது இதுதான் மக்களின் எண்ணம் என்பது போலத் தோற்றம் ஏற்படுத்த முயன்றுள்ளனர்.
நம்முடைய ஆய்வில், இந்த கருத்துக் கணிப்பு தற்போது வெளியிட்டது இல்லை. இது 2016ல் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். இதன் அடிப்படையில், இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
புதிய தலைமுறை 2016ம் ஆண்டு வெளியிட்ட கருத்துக் கணிப்பை தற்போது வெளியிட்டது போல பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அ.தி.மு.க நல்லாட்சி வழங்கியது என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
