முழக்கமிட்டால் குண்டுகள் துளைக்கும்: காஷ்மீரில் நடந்ததாக அதிரவைக்கும் ஃபேஸ்புக் வீடியோ

அரசியல் உலக செய்திகள்

காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொல்வது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Kashmir 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

சாலையில் போராட்டம் செய்பவர்களை இரண்டு போலீசார் துப்பாக்கியால் சுடுகின்றனர். இரண்டு பேர் கீழே விழ, தயாராக இருந்த போலீசார் அந்த இரண்டு பேரையும் ஸ்டிரக்‌சரில் தூக்கிக்கொண்டு செல்கின்றனர். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் செல்கின்றனர். வீடியோவில் இந்த சம்பவம் காஷ்மீரில் நடந்தது என்று குறிப்பிடவில்லை. நிலைத் தகவலில், “முழக்கமிட்டால் குண்டுகள் துளைக்கும் #stand_with_kashmir” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த வீடியோவை தோழர் அருண் சோரி என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவைப் பார்க்கும்போது காஷ்மீரில் நடந்தது போல இல்லை. காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தும்போது, அவர்களுக்கு முன்பாக வரிசையாக போலீசார் நின்று வேடிக்கை பார்ப்பது தெரிகிறது. போலீசார், பொது மக்கள் என்று எல்லோருமே ஒரு நாடகத்தைப் பார்ப்பவர்கள் போலவே இருந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியபிறகும் கூட யாரும் எந்தவித அதிர்ச்சியையும் காட்டவில்லை. இவை அனைத்தும் இது உண்மையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம்தானா அல்லது பயிற்சியா என்ற கேள்வியை எழுப்பியது.

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு பற்றி செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், 370வது பிரிவு நீக்கத்துக்குப் பிறகு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Kashmir 3.png

இதைத் தொடர்ந்து படத்தின் காட்சிகளைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது அப்போது இருந்த பா.ஜ.க அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், முழுமையான தகவல் அதில் இல்லை. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

Kashmir 4.png

தொடர்ந்து வேறு வேறு படங்களை வைத்து ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இந்த வீடியோ பற்றிய முழு விவரம் நமக்குக் கிடைத்தது. நமக்கு யூடியூப் வீடியோ லிங்க் ஒன்று கிடைத்தது. அதில் “மாக் டிரில்ஸ் ஆஃப் குந்தி போலீஸ்” என்று இருந்தது. குந்தி போலீஸ் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா என்று கூகுள் செய்தோம். அப்போது, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் குந்தி என்பது தெரிந்தது. இந்த வீடியோவை, ganesh sawansi என்பவர் 2017 நவம்பர் 1ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தார்.

Archived Link

தொடர்ந்து யூடியூபில் தேடியபோது, இதன் முழு வீடியோ மற்றும் போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் கிடைத்தன. அந்த வீடியோவில் அத்தனையும் நடிப்பு என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

Archived Link

தொடர்ந்து தேடியபோது, இந்த வீடியோ தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ (factcrescendo.com) இந்திப் பிரிவு உள்பட பல ஊடகங்கள் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியதும் தெரியவந்தது. அதில், மேற்கண்ட வீடியோக்களையே ஆதாரங்களாக அளித்திருந்தனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில்,

1) காஷ்மீரில் சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

2) மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததாக இந்த வீடியோவின் காட்சிகள் 2018ம் ஆண்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தெரியவந்துள்ளது.

3) ஜார்கண்ட் போலீசார் நடத்திய மாதிரி போராட்ட தடுப்பு என்று 2017ல் வெளியான யூடியூப் வீடியோ கிடைத்துள்ளது.

4) ஜார்கண்ட் போலீசாரின் ஒத்திகை என்று வெளியான முழு வீடியோ நமக்கு கிடைத்துள்ளது.

5) காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூடு என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவு கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போல இந்த சம்பவம் காஷ்மீரில் நடந்தது இல்லை… ஜார்கண்ட் போலீசார் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:முழக்கமிட்டால் குண்டுகள் துளைக்கும்: காஷ்மீரில் நடந்ததாக அதிரவைக்கும் ஃபேஸ்புக் வீடியோ

Fact Check By: Chendur Pandian 

Result: False