
நீயும் நானும் ஒன்னு, காந்தி பொறந்த மண்ணு, டீக்கடையில நின்னு, தின்னுப்பாரு பன்னு என்பதுதான் தவெக-வின் அடிப்படை எமோஷன் என்று விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தவெக தலைவரும் நடிகருமான விஜய் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நீயும் நானும் ஒன்னு, காந்தி பொறந்த மண்ணு, டீக்கடையில நின்னு, தின்னுப்பாரு பன்னு என்று நான் சினிமாவில் சொன்னதுதான் தவெகவின் அடிப்படை எமோஷன் – தஞ்சை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சினிமாவில் பேசிய வசனத்தை தஞ்சாவூரில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியது போன்று நியூஸ் கார்டு ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜய் உண்மையில் அப்படிக் கூறினாரா என்று அறிய ஆய்வு செய்தோம்.
தஞ்சாவூர் சட்டத்தில் அவர் பேசிய வீடியோவை பார்த்தோம். அவர் அப்படி எதுவும் கூறவில்லை. எனவே, இது போலியானது என்பது உறுதியானது. இந்த நியூஸ் கார்டும் போலியானது என்பதை உறுதிசெய்துகொள்ள ஆய்வைத் தொடர்ந்தோம். புதிய தலைமுறையில் மார்ச் 4, 2026ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம்.

அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று விஜய் புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டு வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. ஆனால் அதில், “எனக்கும் மக்களுக்குமான உறவு இயற்கையாகவே அமைந்த உறவு. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது Election. எனக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் இது Emotion” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வதந்தி பரப்பியிருப்பது தெளிவானது.
இதை உறுதிசெய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். மேலும், சிறிது நேரம் கழித்து “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டு தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவையும் வெளியிட்டனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நீயும் நானும் ஒன்னு என்று சினிமாவில் நான் சொன்னததான் தவெக-வின் அடிப்படை எமோஷன் என்று விஜய் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“நீயும் நானும் ஒன்னு” என்பதுதான் தவெக-வின் அடிப்படை எமோஷன் என்று விஜய் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False


