FACT CHECK: பி.வி.சிந்துவுக்கு சாதி சாயம் பூசிய சமூக ஊடக விஷமிகள்!

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தங்கள் சாதியைச் சார்ந்தவர் என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பி.வி.சிந்து புகைப்படத்துடன் வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “பரமக்குடி ஜமீன், பெரியசாமித்தேவர் அவர்களின் பேத்தியும் பெரு நிலக்கிழார் திரு வேலுச்சாமித்தேவர் அவர்களின் புதல்வியுமான வீர மங்கை, அன்புத் தங்கை PV சிந்து என்ற சிவகாமி நாச்சியார் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !” என்று குறிப்பிடப்பட்டு இருந்து.

இந்த பதிவை Sivakumar Nagarajan என்பவர் 2021 ஆகஸ்ட் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இந்த ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பி.வி.சிந்து எந்த மாநிலத்துக்கு சொந்தக்காரர் என்ற பஞ்சாயத்து தெலங்கானா, ஆந்திராவுக்கு இடையே உள்ளது. பி.வி.சிந்துவின் அப்பா பி.வி.ரமணா தெலங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத்தை சேர்ந்தவர். அம்மா விஜயலட்சுமி விஜயவாடாவைச் சேர்ந்தவர். பி.வி.சிந்து பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஐதராபாத்தில். இந்த நிலையில் பி.வி.சிந்துவை தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். யாரோ விஷமத்தனமாக பதிவிட்டதை, கிண்டல் செய்யும் நோக்கில் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பி.வி.சிந்து என்பதற்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் புதிய விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. பி என்பது பெரியசாமித் தேவர் என்றும் வி என்பது வேலுச்சாமித்தேவர் என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் பி.வி.சிந்துவின் முழு பெயர் புசார்லா வெங்கட சிந்து ஆகும். 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் பி.வி.சிந்துவின் தந்தையின் பெயர் வேலுச்சாமி தேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த பதிவு தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம். பி.வி.சிந்து யாருக்கு சொந்தம் என்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இடையே நடந்துவரும் விவாதம் தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்ட கட்டுரை நமக்கு கிடைத்தது. அதில், பி.வி.சிந்துவின் தந்தை பெயர் பி.வி.ரமணா, தாய் பெயர் பி.வி.விஜயலட்சுமி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர் ஐதராபாத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive

பி.வி.சிந்துவின் தந்தை பெயர் பி.வி.ரமணா என்று பல செய்திகள் நமக்கு கிடைத்தன. மேலும் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் பெற்றதற்கு பின்னர் அவர் அளித்த பேட்டிகள் நமக்கு கிடைத்தன. 

இதன் மூலம் பி.வி.சிந்துவின் தந்தை வேலுச்சாமித் தேவர் என்றும் தாத்தா பெயர் பெரியசாமித் தேவர் என்றும் பகிரப்படும் தகவல் தவறானது, விஷமத்தனமாது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பி.வி.சிந்து தமிழகத்தைச் சார்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் விஷமத்தனமானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பி.வி.சிந்துவுக்கு சாதி சாயம் பூசிய சமூக ஊடக விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False