பண மதிப்பிழப்பு மூலம் இந்தியாவை மோடி காப்பாற்றினார் என ரிசர்வ் வங்கி ஆளுநர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியா சோமாலியா நாடாக மாறி இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா #சோமாலியா நாடாக மாறி இருக்கும் ! 13 லட்சம் கோடி 500,1000 ரூபாய் கள்ளநோட்டுக்களை ஊடுருவ சதி திட்டத்தை முறியடித்தார் பிரதமர் மோடி. உச்சநீதிமன்றத்தில் ரகசியத்தை வெளியிட்டார் RBI #கவர்னர்…

பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 15 லட்சம் கோடி. அவை அனைத்தும் திரும்பி வந்து விட்டதாக பொய் கூறினோம் ஆனால் உண்மையில் வந்தது 10 லட்சம் கோடிகளே .. நாங்கள் ஏன் பொய் சொன்னோம் என்றால் மீதமுள்ள 5 லட்சம் கோடிகளும் யார் வைத்திருக்கிறார்கள் அவர்களின் அடுத்த நகர்வு என்ன என்பதை கண்காணிக்க தான் இந்த உண்மையை வெளிக் கொண்டு வரவே மத்திய அரசுக்கும் எனக்கும் மோதல் போக்கு இருப்பது மாதிரி நாடகத்தை ஏற்படுத்தி நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு விலகியது ..

மொத்த பணமும் எங்கிருக்கிறது என்பதை நான் கண்டு பிடித்து விட்டேன் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புரோக்கரை பிடித்து 5 லட்சம் கோடியையும் பாகிஸ்தானில் பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தையும் செல்லத்தக்க நோட்டாக மாற்றி விடுவார்கள் ..

அதுமட்டுமல்ல முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலமாக நாசிக்கில் இருந்து இந்திய பணத்தை அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெற்றிருக்கின்றனர் இதற்காக ப.சிதம்பரத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது இந்த மிஷினை வைத்து பாகிஸ்தானில் இந்திய பணத்தை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கள்ள பணத்தை அடித்து இந்தியாவிற்குள் மாற்ற திட்டம் போட்டிருந்தார்கள் ரகசிய தகவல் எனக்கு கிடைத்தது அதை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். சற்றும் தாமதிக்காமல் 500 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து விட்டார் ..

அந்த 8லட்சம் கோடி ரூபாயும் நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால் இந்நேரம் இந்தியா சோமாலியாகவா மாறியிருக்கும் ஆக கள்ளப் பணம் மொத்தம் 13 லட்சம் கோடி பணம் நாட்டிற்கு வெளியே தயாராக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மீண்டும் நாட்டிற்குள் வரும். நாடு வீழ்ச்சி அடையும் .. பண மதிப்பு இழப்பு தொடர்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது #ரகுராம்ராஜன் #RBI முன்னாள் #கவர்னர் கூறியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Mohan Kumar Bjp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 22ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில வாரங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் பண மதிப்பிழப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் என ஒரு நையாண்டி பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. “இதை நம்பாதவர்கள் ரத்தம் கக்கி சாகுவீர் என பிரதமர் மோடி சாபம்” என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டனர். இதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. பலரும் இதை பகிர்ந்து வந்தனர். நையாண்டி பதிவு என்பதால் இது பற்றி நாம் ஃபேக்ட் செக்கில் ஈடுபடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

தற்போது, “இதை நம்பாதவர்கள் ரத்தம் கக்கி சாகுவீர் என பிரதமர் மோடி சாபம்” என்ற வாசகம் மட்டும் நீக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நம்முடைய வாசகர்கள் சிலரும் கூட இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

பணம் மதிப்பிழப்பு அறிவிப்பின் போது ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் இல்லை. 2016ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி வரை அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்துள்ளார். தன்னுடைய பதவிக்காலம் முழுவதும் அவர் ஆளுநராக இருந்தார். பண மதிப்பிழப்பு அறிவிப்பு 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியானது. அப்போது உர்ஜித் பட்டேல்தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். அப்படி இருக்கும் போது இவர் எப்படி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க முடியும் என்று தெரியவில்லை. மேலும், ரகுராம் ராஜன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்று எந்த செய்தியும் இல்லை.

2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான போது, இதை சட்ட விரோதம் என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்ததுடன், இது தொடர்பாக ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்தது. ஆனால், இது வரை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படவில்லை என்றுதான் நமக்கு செய்திகள் கிடைத்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வராத நிலையில், மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்காத நிலையில் ரகுராம் ராஜன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் என்ற பதிவு நகைச்சுவையாகவே தெரிந்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக ரகுராம் ராஜனின் நிலைப்பாடு என்ன என்று பார்த்தோம். பண மதிப்பு இழப்பு நடவடிக்கையில் சாதகத்தை விட பாதகமே அதிகமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். தன்னுடைய நூலிலும் இதுபற்றி அவர் தெரிவித்திருந்த செய்தி கிடைத்தது. எந்த நிலையிலும் அவர் பண மதிப்பு நடவடிக்கையை பாராட்டி, நியாயப்படுத்திப் பேசியதாக செய்தி கிடைக்கவில்லை. மேலும், பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் ரகுராம் ராஜன் நெருக்கமாக பணியாற்றி வருவதை பல முறை நம்முடைய கட்டுரைகளில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பழைய இயந்திரத்தை ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு விற்றார் என்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் வதந்தி பரவியது. இந்தியாவே வெளிநாட்டில்தான் பணத்தை அச்சடித்து வந்தது. பாகிஸ்தான் தன்னுடைய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அதே அச்சகத்தில் இந்தியாவும் தன்னுடைய ரூபாயை அச்சடித்தது என்று முன்பு சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருந்தார். அதை வைத்து ரகுராம் ராஜன் குற்றம்சாட்டினார் என்று பரவிய தகவலை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ பொய்யான செய்தி என்று உறுதி செய்திருந்தது. அந்த தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடியுடன் இணைந்து பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் செய்தார் என்று பகிரப்படும் தகவல் உண்மையானது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பண மதிப்பு இழப்பின் மூலம் பிரதமர் மோடி நாட்டைக் காப்பாற்றிவிட்டார் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்  என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பண மதிப்பிழப்பு மூலம் இந்தியாவை மோடி காப்பாற்றினார் என ரிசர்வ் வங்கி ஆளுநர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False