
மோடி பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்று கூறிய நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியை கண்டும் காணாமல் ஒதுக்கிவிட்டார் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
இதனை பலரும் ஃபேஸ்புக் மட்டுமின்றி, ட்விட்டர் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Twitter Claim Link 1 I Twitter Claim Link 2
உண்மை அறிவோம்:
ஆசிய பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் வகையில், QUAD (Quadrilateral Security Dialogue) என்ற அமைப்பை, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இணைந்து கடந்த 2007ம் ஆண்டில் ஏற்படுத்தின. இந்த அமைப்பின் சார்பாக, அவ்வப்போது உச்சி மாநாடுகள், பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, 2022ம் ஆண்டுக்கான குவாட் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற்றது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா மட்டுமின்றி தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ப்ரூனே உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
TOI Link I Indian Express Link I NDTV Link
இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அடையாளம் தெரியாதது போல, அமெரிக்க அதிபர் பைடன் புறக்கணித்துவிட்டார் எனக் கூறி மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில், இவர்கள் பகிரும் வீடியோ முழுமையானது இல்லை. இதன் முழு வீடியோவை ஆஸ்திரேலியாவின் SBSNews ஊடகத்தில் பணிபுரியும் Naveen Razik அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவில் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese-ஐ இந்திய பிரதமர் மோடி, குழு புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறார். அப்போது, மோடியை பார்த்து, ஆஸ்திரேலிய பிரதமர் பற்றி ஒரு நகைச்சுவையை உதிர்த்தபடி, கை காட்டுகிறார் பைடன். அதன்பிறகே, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பேனிஸிடம் பைடன் பேசுகிறார்.

அல்பேனிஸிடம் பேசிக் கொண்டே அப்படியே சகஜமாக, மோடியிடமும் பைடன் பேசுகிறார். இதை வைத்துப் பார்த்தால், அல்பேனிஸை முதல்முறையாக பைடன் பார்ப்பதுபோலவும், அவரை மோடி அறிமுகம் செய்து வைப்பது போலவும் அனைவரது முக பாவனைகளும் உள்ளன.

இதற்கு காரணம், ஜோ பைடன் மற்றும் அல்பேனிஸ் இருவரும் ஐரீஷ் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், ஆஸ்திரேலியாவின் பிரதமராக பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே, குவாட் உச்சி மாநாட்டில் அல்பேனிஸ் பங்கேற்றார். ஆஸ்திரேலிய பிரதமராக அவர் பங்கேற்கும் முதல் மாநாடு இதுவாகும். எனவேதான், அவரைப் பார்த்து ஜோ பைடன் வியப்படைகிறார்.
இதுதவிர, ஜோ பைடன் அமெரிக்க அதிபராக 2021ல் பதவியேற்றதும் அவரை மோடி சந்தித்துப் பேசியிருக்கிறார். கடந்த 2021 செப்டம்பரில் கூட மோடி அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பாகவும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக பைடன் இருந்தபோது கூட, மோடி அவரை சந்தித்திருக்கிறார். எனவே, மோடியை பைடனுக்கு அடையாளம் தெரியாமல் புறக்கணித்தார் என்று கூறுவது தவறாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:2022 குவாட் உச்சி மாநாட்டில் மோடியை புறக்கணித்தாரா அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
