
இந்தியப் பொருளாதாரம் பற்றி ரத்தன் டாடா மிக நீண்ட கருத்தை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ரத்தன் டாடா படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “TATA குழுமத்தின் முன்னாள் தலைவரும், கொடைவள்ளலும் ஆன_ *திரு.இரத்தன் டாடா அவர்களின் கருத்துப்பதிவு* : “கொரனாவின் விளைவாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடையும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். எனக்கு இந்த நிபுணர்களைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், மனித உந்துதல் மற்றும் மனஉறுதியான முயற்சிகளின் மதிப்பு பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதை நான் நன்கு அறிவேன்.
*துறை வல்லுநர்களின் கணிப்புகளை நம்பியே ஆகவேண்டும் எனில்…* இரண்டாம் உலகப்போருக்கு பின் முற்றிலும் அழிந்த ஜப்பானிற்கு எதிர்காலமே கிடையாது. ஆனால் அதே ஜப்பான் முப்பது ஆண்டுகளில், அதற்கு காரணமான அமெரிக்காவையே சந்தையில் கதறச் செய்தது. அரேபியர்களால் உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போயிருக்கவேண்டிய இஸ்ரேலின் தற்போதைய நிலைமையே வேறு.
காற்றியக்கவியல் விதிகளின்படி பம்பல் வண்டுகளால் பறக்கவியலாது. ஆனால் இயற்பியல் பற்றி ஏதும் அறியாத அவ்வண்டுகள் பறக்கத்தானே செய்கிறது. அப்போதைய அணித்திறமைகளின் அடிப்படையில், வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற கடைசி இடத்திற்கு கணிக்கப்பட்ட நம் இந்திய அணி, 1983ல் உலக கோப்பையை வென்றது சரித்திரம்.
உடல் பலவீனத்தினால், ஊன்றுகோல் இன்றி நடப்பதே கடினம் என கருதப்பட்ட வில்மா ருடால்ப், தடகளப்போட்டிகளில் நான்கு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் அமெரிக்க பெண் சாதனையாளர். கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சாதாரண வாழ்க்கையே வாழ்வது கடினமெனக் கருதப்பட்ட அருணிமா சின்ஹாதான் எவரெஸ்ட் சிகரம் ஏறினார்.
இவற்றையெல்லாம் நோக்குகையில், கொரோனா நெருக்கடியும் வேறுபட்டதல்ல. *கொரோனாவின் கைகளை நாம் வீழ்த்துவோம். இந்திய பொருளாதாரம் ஒரு சிறந்த முறையில் மீண்டும் வீறுகொண்டெழும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை – இரத்தன் டாடா” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, புதிய தகவல்கள்… New information… என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Natesan Subramani என்பவர் 2020 ஏப்ரல் 11ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ரத்தன் டாடா பற்றி அவ்வப்போது சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்தவர்களுக்கு டாடா நிறுவனங்களில் வேலை இல்லை என்று அறிவித்ததாக, பாகிஸ்தானுக்கு டாடா சுமோவை விற்பனை செய்ய மறுத்ததாகப் பல வதந்திகள் பரப்பப்பட்டன.
எனவே, உண்மையில் இந்த பதிவை ரத்தன் டாடா வெளியிட்டாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். சமீபத்தில் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என்று ரத்தன் டாடா பேட்டி ஏதும் அளித்தாரா என்று தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு பேட்டி, செய்தி நமக்கு கிடைக்கவில்லை.
ரத்தன் டாடாவின் கருத்துப் பதிவு என்று குறிப்பிட்டுள்ளதால், அவருடய சமூக ஊடக பக்கங்களில் இது தொடர்பாக ஏதேனும் கருத்தைத் தெரிவித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். ஏப்ரல் 11ம் தேதி ரத்தன் டாடா வெளியிட்ட பதிவு கிடைத்தது.
அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் ஆங்கில வடிவ போட்டோ ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார். நிலைத் தகவலில், “இந்த பதிவு என்னால் கூறப்பட்டதா, நான் பதிவிட்டதோ இல்லை. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உண்மையா என்பதை ஊடங்களில் சரிபார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் ஏதாவது கருத்து கூற விரும்பினால் அதை நேரடியாக என்னுடைய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
ரத்தன் டாடாவே இந்த கருத்துக்கள் என்னுடையது இல்லை என்று கூறியிருப்பதால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பொருளாதார வீழ்ச்சி பற்றி ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா?- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
