கோவிலுக்கு நெய் விநியோகிக்கும் ஆவினுக்கு எதற்கு ஹலால் என்று பரவும் விஷம பதிவு!
ஆவின் வெண்ணெய்யில் எதற்கு ஹலால் முத்திரை உள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆவின் வெண்ணெய் பாக்கெட் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "என்ன பாபுஜி ஆவினில் எதற்கு ஹலால்... இந்த ஆவின்தான் தமிழக கோயில்களுக்கும் நெய் சப்ளை செய்கிறதாம்... கொடுமை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆவினில் ஹலால் முத்திரை உள்ளது. இந்த ஆவின்தான் கோவில்களுக்கு நெய் சப்ளை செய்கிறது என்று வன்மத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் ஹலால் முத்திரையுடன் ஐஎஸ்ஓ முத்திரையும் இடம் பெற்றிருந்தது. நல்ல வேளை ஏன் ஐஎஸ்ஓ, FSMS போன்ற சான்றிதழ்கள் எல்லாம் எதற்கு என்று கேட்காமல் விட்டார்களே. கோவிலுக்கு வழங்கப்பட்ட நெய் அல்லது வெண்ணெய் அல்லது வேறு ஆவின் பால் பொருட்களில் ஹலால் முத்திரை உள்ளது என்று ஆதாரத்துடன் குற்றம்சாட்டியிருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். அதை விடுத்து வெண்ணெய் பாக்கெட் புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளனர்.
ஆவின் தமிழ்நாட்டில் மட்டும் விற்பனையாவது இல்லை. அமெரிக்கா, அரபு நாடுகள் உள்பட உலகின் பல நாடுகளுக்கும் ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அரபு நாடுகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் ஹலால் முத்திரை கட்டாயம். ஆவின் மட்டுமல்ல இந்தியாவின் வேறு பல தயாரிப்புகளும் கூட ஹலால் முத்திரையுடன் அரபு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவிலும் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
உண்மைப் பதிவைக் காண: blinkit.com I Archive
தமிழகத்தில் விற்பனையாகும் ஆவின் வெண்ணெய்யில் ஹலால் முத்திரை உள்ளதா என்று பார்த்தோம். ஜியோ, பிளிங்கிட், அமேசான், ஃபிளிப்கார்ட், பிக்பாஸ்கெட் என ஆன்லைனில் ஆவின் வெண்ணெய் விற்பனையாகும் அனைத்து தளங்களிலும் ஹலால் முத்திரையுடன் ஆவின் வெண்ணெய் விற்பனை செய்யப்படுவது இல்லை என்பது தெரியவந்தது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவிட்டு தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது. இதை வைத்து தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் தமிழ்நாடு அரசை விமர்சித்திருந்தது தொடர்பான செய்திகளும் கிடைத்தன. இதன் மூலம் பழைய படத்தை வைத்து மீண்டும் பிரச்னையை ஏற்படுத்த முயற்சித்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விளக்கம் ஏதும் உள்ளதா என்று அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்த்தோம். அதில் எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் இது தொடர்பாக பதிவிட்டிருந்ததைக் கண்டோம்.
அதில், "ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பு 15க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே ஹலால் முத்திரை இடம்பெறும். தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை இடம்பெறாது. இப்புகைப்படத்தை வைத்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்தி பரப்பி வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்பு இது போன்று தனியார் கோதுமை மாவு நிறுவனத்தின் பாக்கெட்டில் ஹலால் முத்திரை இருந்தது என்று சமூக ஊடகங்களில் பலரும் கொந்தளித்திருந்தனர். அதற்கு அந்த நிறுவனம், "குறிப்பிட்ட நாடு, பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றால் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இப்படி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் பின்பற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப எங்கள் நிறுவனம் செயல்படுகிறது" என்று விளக்கம் அளித்திருந்தது.
அரபு நாடுகளில் ஹலால் முத்திரை இல்லை என்றால் அந்த பொருட்களை இறக்குமதி செய்ய, விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். அந்த நாடுகளுக்கு செல்லும் பொருட்களுக்கு ஹலால் முத்திரை வழக்கமான ஒன்று. இப்படி அரபு நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஆவின் வெண்ணெய் புகைப்படத்தை எடுத்துவந்து, தமிழ்நாட்டில் ஹலால் முத்திரையுடன் இந்து கோவில்களுக்கு நெய் விற்பனை செய்யும் ஆவின் என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் தவறான தகவலும் கலந்தது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கோவில்களுக்கு ஹலால் வெண்ணெய், நெய் விநியோகம் செய்யும் ஆவின் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram