உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியது உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியதாகவும் இனியும் தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உபியில் மீண்டும் EVM சிக்கியது..! இந்த *** தேர்தல் ஆணையத்தை நம்பி ஒரு புன்னியமும் இல்லை..!!

Archived link

லாரியில் நிறைய வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பயன்படும் தகர பெட்டிகள் உள்ளன. இந்த லாரியை செல்லவிடாமல் பலர் முற்றுகையிடுவது போல் மற்றொரு படம் உள்ளது. இந்த பதிவை Maruppu – மறுப்பு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே 21ம் தேதி வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “உ.பி-யில் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சிக்கியது. இனி தேர்தல் ஆணையத்தை நம்பி ஒரு புண்ணியமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் நேரம் என்பதாலும், பா.ஜ.க வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடு செய்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவருவதாலும் இது உண்மை என்று நம்பி பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டிருந்த மையத்துக்குள் அதிகாரி ஒருவர் நுழைந்து, அங்கிருந்த ஆவணங்களை வெளியே கொண்டு சென்று ஜெராக்ஸ் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டார்.

கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 50 வாக்குப்பதிவு இயந்திரங்களில் தலா 1000 கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. எனவே, அவற்றை தேனியில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த நேரத்தில், உத்தரப்பிரதேசத்தில் கடை ஒன்றில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதாக வீடியோ வெளியானது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 21 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்த்து வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.

கடையில் கிடைத்ததாக கூறப்படும் வீடியோ பொய் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இது தொடர்பாக நம்முடைய tamil.factcrescendo.com மேற்கொண்ட உண்மை கண்டறியும் ஆய்வைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

கடையில் வாக்குப்பதிவு இயந்திரம் கிடைத்தது என்ற வீடியோ வெளியான நேரத்தில், லாரியில் வாக்குப்பதிவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதாக ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டுவருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

படத்தை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இது தொடர்பான தகவல் கிடைத்தது. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடக்கவில்லை. ஜார்கண்ட் மாநிலம் டியோகர் பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ட்வீட் நமக்கு கிடைத்தது. அதில், “ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்ட் விகாஸ் மோட்சா அமைப்பினர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுவதாக கூறி ஒரு வாகனத்தை சிறைபிடித்தனர். அங்கு வந்த எஸ்.டி.ஓ அதிகாரி விஷால் சாகர், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு ஏற்கனவே பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. இவை வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்க பயன்படும் காலி பெட்டி மட்டுமே. சந்தேகம் இருந்தால், வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு சென்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

Archived link

இதே செய்தி தமிழில் நக்கீரன் இணைய தளத்திலும் வெளியாகி இருந்தது. அதில், “மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திர பெட்டிகள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு இன்மை தொடர்பாக செய்திகள் வெளியானாதல், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் பகிர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.

நமக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில்,

1) வாக்குப்பதிவு பெட்டி கொண்டுசெல்லப்பட்ட லாரியை முற்றுகையிட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடக்கவில்லை. ஜார்கண்ட் மாநிலம் டியோகர் என்ற பகுதியில் நடந்துள்ளது.

2) லாரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை. அவற்றை வைக்க பயன்படும் காலி தகர பெட்டி மட்டுமே இருந்துள்ளது என்று ஏ.என்.ஐ மற்றும் நக்கீரன் இணைய செய்தி கூறுகிறன.

3) வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் “வெறும் காலி பெட்டிகள் கொண்டு செல்லப்பட்ட லாரியின் படத்தைக் காட்டி, உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுகிறது” என்று தவறாக கூறப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியது உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •