இங்கிலாந்தில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நவக்கிரக கருவிகள் கிடைத்ததா?
6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நவக்கிரக கருவிகள் இங்கிலாந்தில் உள்ள ஒரு ஆற்றில் மீன் பிடிக்கும் போது கிடைத்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஒருவர் மீன் பிடிக்கும் போது இந்தியாவின் நவக்கிரக கருவிகள் கிடைத்தது போன்று வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் பேசுவது போல் உள்ளது. அதனால் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், "*ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நவக்கிரகக் கருவிகளை மீனவர்கள் இங்கிலாந்தில் ஆற்றின் ஆழத்தில் கண்டெடுத்துள்ளனர்.* 🚩 *ஜெய் சனாதன்*🚩" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமஸ்கிருதத்திற்குப் பல நூற்றாண்டுகளாக எழுத்து வடிவமே இல்லை. ராஜஸ்தானின் ஆத்திபாத பிராமி கல்வெட்டுதான் மிகவும் பழமையான சமஸ்கிருத எழுதுவடிவ கல்வெட்டு என்று அறியப்பட்டுள்ளது. அதுவும் கூட கி.மு 2 அல்லது 1ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்க 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத எழுத்து வடிவத்தில் எழுதப்பட்ட நவக்கிரக கருவிகள் இங்கிலாந்தில் கிடைத்தது என்பது ஆச்சரியத்தை அளித்தது.
வீடியோவில் ஏராளமான சதுர உலோகம் மற்றும் துர்கை போன்ற இந்து தெய்வம் பொறிக்கப்பட்ட நாணயத்தைக் காண முடிந்தது. இவற்றைப் பார்க்க துல்லியமாக நவீன இயந்திரங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது போல இருந்தது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: dailystar.co.uk I Archive
இந்த வீடியோவில் இடம் பெற்ற நவக்கிரக கருவிகள் காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அதில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவத்தன்று கொவென்ட்ரியில் உள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற போது 60க்கும் மேற்பட்ட சின்ன சதுர இந்து வழிபாட்டு பொருளை அவர் கண்டறிந்துள்ளார். அதனுடன் சில சாவிகள், காசுகளையும் கண்டறிந்துள்ளனர். அதில் இந்து மத - சமஸ்கிருத எழுத்துக்கள் இருப்பதை கண்ட அவர்கள், ‘அது என்ன என்று ஆய்வு செய்து, அதன் மதிப்பு என்ன என்று கண்டறிய உள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2020ம் ஆண்டு மே 12ம் தேதி இந்த செய்தி வெளியாகி இருந்தது.
உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive
2020ம் ஆண்டு ஜூன் மாதம் தி இந்து-வில் இது தொடர்பாக ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், மே 8ம் தேதி 38 வயதான வில் ரீட் தன்னுடைய மகன்களுடன் சேர்ந்து சோவ் ஆற்றில் மீன் பிடிக்க சென்றார். அப்போது 84 ஈய சதுரங்கள், துளையிடப்பட்ட சில்லறைகள் மற்றும் துர்கா நாணயத்தை (நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற நாணயம் இந்த கட்டுரையிலும் இருந்தது) கண்டறிந்துள்ளனர். ஆய்வு செய்து பார்த்த போது அது இந்தியாவைச் சார்ந்த ராகு இயந்திரம் என்பது தெரியவந்தது. ராகு தோஷத்தைச் சரி செய்ய யாரோ இதை பூஜை செய்து ஆற்றில் போட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. ராகுவுடன் தொடர்புடைய உலோகம் ஈயம் என்பதால் ஈயத்தில் சதுரங்கள் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதன் எடை கிட்டத்தட்ட 8 கிலோ இருப்பதும் தெரியவந்தது.
இந்த இயந்திரங்கள் மற்றும் நாணயங்கள் எல்லாம் 1981ல் இருந்து 2000ம் ஆண்டுக்குள் ஆற்றில் வீசப்பட்டதாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்தில் ஆற்றை அசுத்தம் செய்வதை யாரும் விரும்புவது இல்லை. இந்த நூற்றாண்டைச் சார்ந்த யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வந்த முதியவர்கள் இப்படி ஆற்றை அசுத்தம் செய்யும் வகையில் எட்டு கிலோ ஈய உலோகத்தை வீசியிருக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: popularmechanics.com I Archive
செய்தி ஒன்றில், "இது வரை கண்டறியப்பட்ட மிகப் பழமையான ஈய கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகளுக்கு முந்தையவை. ஆனால் இந்தியர்கள் முதன் முதலில் இங்கிலாந்துக்கு வந்தது 500 ஆண்டுகளுக்கு முன்பு எலிசபெத் ராணி காலத்தில். அந்த காலக்கட்டத்தில் ஆற்றில் ஈயம் போடப்பட்டிருந்தாலும் அது தண்ணீரில் கரைந்திருக்கும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தவறாக புரிந்துகொண்டு, கிடைத்த பொருளின் வயது 6000ம் ஆண்டு பழமை வாய்ந்தது என்று வதந்தி பரப்பியிருப்பார்கள் போல.
இங்கிலாந்தில் 6000ம் ஆண்டுக்கு முந்தைய நவக்கிரக கருவிகள் கிடைத்ததாக நமக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மீன்பிடிக்கச் சென்றவர்களுக்கு மாட்டிய இந்த காரீய சதுரங்கள் கிடைத்தன என்ற செய்தி மட்டுமே கிடைத்தது. இவை எல்லாம் இங்கிலாந்தில் 6000ம் ஆண்டுக்கு முந்தைய நவக்கிரக கருவிகள் கிடைத்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு யாரோ வழிபாடு செய்து ஆற்றில் வீசிய ராகு ஈய சதுரங்களை 6000ம் ஆண்டுக்கு முந்தைய நவக்கிரக யந்திரங்கள் கிடைத்தன என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…