எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சினேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நம்முடைய வாசகர் ஒருவர் புதியதலைமுறை வெளியிட்டது போன்று உள்ள நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், "எடப்பாடி பழனிசாமி சவால் புரட்சித் தலைவர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான். ஆனால் அந்த சாராயத்தால் ஒருவருக்காவது சின்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது நிரூபித்தால் அந்த நொடியே நான் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால்" என்று இருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
இதை யாரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்களா என்று தேடிப் பார்த்தோம். அப்போது, Raja Raja @RajaRaja799 என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் இதை பகிர்ந்திருந்தார். நிலைத் தகவலில், "எவனோ நம்ம ஆளு தான் எடுபுடி மனசுல இருக்கரத அப்படியே சொல்லிட்டான்" என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை வெளியிட்டது இல்லை என்பதை உறுதி செய்ய ஆய்வை மேற்கொண்டோம். முதலில் இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். மே 16, 2023 அன்று வெளியான புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு நமக்கு கிடைக்கவில்லை.
அதே நேரத்தில், "கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை புதிய தலைமுறை தொலைக்காட்சி டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பி, ‘இது உண்மையா?,’ என்று கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.
இதன் அடிப்படையில் எம்ஜிஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சினேன் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
எம்ஜிஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சினேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False