
அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக, சசிகலா அறிவித்தார் என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வி.கே.சசிகலா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “EPS,OPS இருவரும் அஇஅதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறேன் – வி.கே சசிகலா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Kanchana Pillathi என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 11ம் தேதி பகிர்ந்துள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமியை தற்காலிக பொதுச் செயலாளாராக நியமித்துள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே சசிகலா இவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் என நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், டிசைன் என எதுவும் புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது போலியானது என்று தெரிகிறது. புதிய தலைமுறை 2022 ஜூலை 11ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம்.
அதில், சசிகலா தொடர்பாக ஒரு நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. ஆனால், அது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுடன் சிறிதும் தொடர்புடையதாக இல்லை. அந்த நியூஸ் கார்டில், “தொண்டர்கள் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது – சசிகலா. இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது தொண்டர்கள் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது; தலைமைப் பதவியை அடித்து, பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது; சட்டப்படி செல்லர். நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்துவிடக் கூடாது; ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு நிஜத்தை நிச்சயம் அடைவோம் – சசிகலா” என்று இருந்தது. சசிகலா தொடர்பாக வேறு எந்த நியூஸ் கார்டும் இல்லை.

எனவே, இது தொடர்பாக புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவர், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
2022 ஜூலை 11ம் தேதி சசிகலா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக அறிவித்தாரா எனப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அவருடைய பேட்டியை முன்னணி ஊடகங்கள் யூடியூபில் முழுமையாக வெளியிட்டிருந்தன. அந்த வீடியோக்களை பார்த்தோம். அதிலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-ஐ நீக்குவதாக சசிகலா கூறவில்லை.
இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-ஐ நீக்குவதாக சசிகலா அறிவித்தார் என்ற தகவல் இரண்டும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கி சசிகலா அறிவித்தார் என பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று சசிகலா அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
