
துபாயில் நடந்த ஐ.பி.எல் இறுதி போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் திருட்டு ரயில் திமுக என்று போஸ்டர் பிடித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை நம்முடைய சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) அனுப்பி, இந்த படம் உண்மையானதுதானா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
விளையாட்டு மைதானத்தில் ரசிகர் ஒருவர் “திருட்டு இரயில் திமுக” என்ற போஸ்டரை பிடித்திருக்கும் புகைப்படத்துடன் உருவாக்கப்பட்ட புகைப்பட பதிவு அது. அந்த புகைப்படத்தின் மேலே, “துபையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டியில் நபர் ஒருவர் ஏந்தியுள்ள வாசகம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது! இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் துபாய் வரைக்கும் போய் வாங்கிட்டானுங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
ஃபேஸ்புக்கில் இந்த பதிவை யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். Subashini Nadar என்ற ஃபேஸ்புக் ஐ.டி-யைக் கொண்ட நபர் 2021 அக்டோபர் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் ஒரே ஒரு வாக்கு வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை வைத்து ஒத்த ஓட்டு பா.ஜ.க என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. ஐ.பி.எல் இறுதி போட்டியின் போது ரசிகர் ஒருவர் இந்த ஒத்த ஓட்டு பா.ஜ.க என்று எழுதிய போஸ்டரை பிடித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களில் அந்த புகைப்படம் வெளியாகி இருந்தது.
ரசிகரின் அந்த புகைப்படத்தை வைத்து ஏராளமான மீம்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்று தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவும் கூட. ஆனால், அந்த மீமில் ஒத்த ஓட்டு பாஜக என்று இருந்தது. தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த மீம்களை சமூக ஊடகங்களில் வைரல் ஆக்கினர்.

இதனால் வெறுப்படைந்த பா.ஜ.க ஆதரவாளர்கள் அந்த மீமை எடிட் செய்து “திருட்டு இரயில் திமுக” என்று மாற்றி எழுதி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. இந்த படத்தை சற்று பெரிதாக்கிப் பார்த்தால், ஒத்த ஓட்டு பா.ஜ.க என்ற வார்த்தை அழிக்கப்பட்டு, திருட்டு இரயில் திமுக என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அசல் பதிவைக் காண: Facebook
ஐ.பி.எல் போட்டியில் ஒத்த ஓட்டு பா.ஜ.க என்று ரசிகர் ஒருவர் போஸ்டர் பிடித்ததை முன்னணி ஊடகங்கள் கூட செய்தியாக வெளியிட்டிருந்தன. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூட “ஐ.பி.எல் போட்டியில் ஒரு பேப்பரை எடுத்து ‘ஒத்த ஓட்டு பாஜக’ என்று எழுதி தொலைக்காட்சியில் காட்டுகிறார் ஒருவர்” என்று கூறியதாக நக்கீரனில் செய்தி வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: nakkheeran.in I Archive 1 I etvbharat.com I Archive 2 I oneindia.com I Archive 3
பா.ஜ.க-வை விமர்சனம் செய்து யாரோ ஒருவர் ஐ.பி.எல் போட்டியில் ஒத்த ஓட்டு பா.ஜ.க என்று போஸ்டரை பிடிக்க, அதை வைத்து தி.மு.க-வினர் மீம்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். இதனால் வெறுப்படைந்த பா.ஜ.க-வினர் தி.மு.க-வினர் வெளியிட்ட மீமை எடிட் செய்து “திருட்டு இரயில் திமுக” என்று மாற்றி சமூக ஊடகங்களில், நகைச்சுவை நோக்கில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.
முடிவு:
ஐபிஎல் இறுதி போட்டியில் ரசிகர் ஒருவர் திருட்டு ரயில் திமுக என போஸ்டர் பிடித்ததாக பரவும் படம் போலியானது, எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘திருட்டு ரயில் திமுக’ என்று பேனர் பிடித்த ஐபிஎல் ரசிகர்?- உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: Altered
