ஈரானில் களமாட காத்திருக்கும் 80 ஆயிரம் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

False சமூகம் சார்ந்தவை I Social சர்வதேசம் | International

ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் களத்தில் 80 ஆயிரம் வீரர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அரங்கம் ஒன்றில் ஆயிரக் கணக்கான வீரர்கள் அணிவகுத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், ஈரானின் ராணுவ பலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ஈரானின் 80000 வீரர்கள் களத்தில் எச்சரிக்கையுடன் உள்ளார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எதிர்கொள்ள ஈரானில் 80 ஆயிரம் வீரர்கள் களத்தில் உள்ளார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. போர் பதற்றம் உள்ள சூழலில் போர்ப் பயிற்சியில் ஈடுபடாமல் இப்படி அணிவகுப்பு கண்காட்சி நடத்துவார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த ஆண்டு தொடக்கத்தில் சௌதி அரேபியாவில் நடந்த ராணுவ அணிவகுப்பு என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் “சௌதி அரேபிய ராணுவத்தின் பிரம்மாண்ட அணிவகுப்பு.(சௌதி பட்டத்து இளவரசர்) முகமது பின் சல்மானிடமிருந்து அனைவருக்குமான ஆச்சரியமான செய்தி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடிய போது இதே போன்று ஏராளமான வீடியோக்கள் கிடைத்தன. அதே இடத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பு வீடியோக்கள் அது. அந்த அரங்கின் தோற்றம் எல்லா வீடியோக்களிலும் ஒன்றாக இருந்தது. அனைத்திலும் சௌதி அரேபியாவின் ராணுவ அணிவகுப்பு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடிய போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்திலும் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வுக் கட்டுரை வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதில், சௌதி அரேபியாவுக்குப் புனித பயணம் மேற்கொள்பவர்களைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு அது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதே நேரத்தில் ஈரானில் மற்ற நாடுகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் ராணுவ அணிவகுப்பு நடந்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சௌதி அரேபிய பாதுகாப்புப் படை வீரர்களின் பழைய அணிவகுப்பு வீடியோவை எடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எதிர்கொள்ள களத்தில் தயாராக உள்ள ஈரானிய ராணுவ வீரர்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:ஈரானில் களமாட காத்திருக்கும் 80 ஆயிரம் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply