
மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வடிவிலான வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வடிவிலான சீமான் பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி! கோமியம் விவகாரம் தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்” என்று இருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
உண்மை அறிவோம்:
பசு மாட்டின் சிறுநீர் மனிதர்களுக்கு ஆரோக்கியம் தரும் என்று சென்னை ஐஐடி இயக்குநர் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானிடம் கேட்ட போது மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி என்று கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் சீமான் என்ன பேசினார் என்று அறிய ஆய்வு செய்தோம்.
நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட பதிவை அதன் எக்ஸ் தள பக்கத்திலிருந்து எடுத்தோம். அதில், “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி” என்று இல்லை. அதற்கு பதில், “இந்தியாவில் தான்…” என்று இருந்தது. இதை மாற்றி தங்களுக்கு வேண்டிய விஷயத்தை வைத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது.
அடுத்தது சீமான் என்ன கூறினார் என்று பார்த்தோம். நிருபர் கோமியம் தொடர்பாக கேள்வி கேட்கிறார். அதற்கு சீமான், “அதான் மருத்துவமனைகளுக்கு எல்லாம் லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்கச் சொன்னோம். இந்த பைத்தியங்ககிட்ட நாடும், மக்களும் சிக்கிக்கொண்டனை நினைத்து இது பண்ண வேண்டியதுதான். வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க. மாட்டுக்கறி திங்கிறான் பாருங்க… மாட்டுப் பால் குடிப்பவன் இடைசாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்ந்த சாதி… இதுதான் இந்த நாட்டு கட்டமைப்பு. இந்தியாவில்தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, மூத்திரம் குடிக்கப்படுது. இந்த நாட்டில நீ சிக்கிக்கிட்ட, நானும் சிக்கிக்கிட்டேன்” என்கிறார்.
மாட்டுக்கறி தின்பவர்கள் கீழ்சாதி என்று சீமான் கூறவில்லை, மாட்டுக்கறி தின்பவர்கள் கீழ் சாதியாக பார்க்கப்படுகின்றனர் என்று அவல நிலையை விளக்கி சீமான் பேசுகிறார். ஆனால், அந்த ஒரே ஒரு வரியை மட்டும் வைத்து, சீமானே அப்படி மாட்டுக் கறியைச் சாப்பிடுபவர்களை விமர்சித்தது போன்று வீடியோவை எடிட் செய்துள்ளனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது தெளிவாகிறது.
முடிவு:
மாட்டுக்கறி சாப்பிடுபவனை கீழ் சாதி என்றும் மாட்டு மூத்திரத்தை குடிப்பவனை உயர்சாதி என்றும் இந்தியாவில் சமூக கட்டமைப்பு உள்ளது என்று சீமான் கூறியதில், மாட்டுக்கறியை சாப்பிடுபவன் கீழ் சாதி என்ற ஒரே ஒரு வரியை மட்டும் எடிட் செய்து எடுத்து, சீமான் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கடுமையாக பேசிவிட்டார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:‘மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி’ என்று சீமான் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
