அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா என்று தினமலர் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா! கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள், சீனியர் நிர்வாகிகளுடனான மோதல் போக்கு, தன்னிச்சையான நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமாறு செயல்படும் காரணத்தால் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாகவும், அப்பதவியில் எல்.முருகன் ஆதரவு பெற்ற நடிகை ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன!" என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை ப. கார்த்திகேயன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 9ம் தேதி பதிவிட்டுள்ளார். அவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக-வின் நிர்வாகிகளாக இருந்த திருச்சி சூர்யா - டெய்சி இடையேயான தொலைபேசி உரையாடல் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கட்சியிலிருந்தே விலகினார். அண்ணாமலை மீது மத்திய தலைமை அதிருப்தியில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து நீக்க மத்திய பாஜக தலைமை முடிவு செய்திருப்பது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போது தினமலர் வெளியிட்டது போல இல்லை. வழக்கமாகத் தினமலர் வெளியிடும் நியூஸ் கார்டுகளைப் போல அல்லாமல், வித்தியாசமாக இருந்தது. மேலும், பாஜக-வுக்கு எதிரான செய்திகள் தினமலரில் வருவதற்கு வாய்ப்பும் குறைவு என்பதால் இந்த நியூஸ் கார்டு உண்மையானதுதானா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

தினமலர் இந்த நியூஸ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது இந்த நியூஸ் கார்டு போலியானது என்று "FAKE" முத்திரை குத்தி தினமலர் பதிவு வெளியிட்டிருந்தது. அந்த பதிவில், "தினமலரில் ப.ஜ.க., தமிழகத் தலைவர் பற்றிய இதுபோன்ற செய்தியோ, சமூக வலைதளப்பதிவுகளோ வெளியாகவில்லை. எனவே, இப்பதிவு போலியானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

முடிவு:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கல்தா என்று பரவும் தினமலர் நியூஸ் கார்டு போலியானது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலைக்கு கல்தா என பரவும் நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False