
ஸ்டெர்லைட் முதலாளிகளிடமிருந்து ரூ.100 கோடியை தி.மு.க கமிஷனாக பெற்றுள்ளதாகவும் விரைவில் அந்த ஆலையை கனிமொழி வாங்க உள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் சன் நியூஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தார். அதில், “ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிசன். அருணா ஜெகதீசன் ஆணய பரிந்துரையை (குற்றவியல் நடவடிக்கை) செயல்படுத்தாமல் இருக்க ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் திமுக 100 கோடி பணம் வாங்கியதாக ஸ்டெர்லைட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திருமதி கனிமொழி அவர்கள் வாங்க உள்ளதாகக் கூறப்படுகிறது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் யாரும் ஷேர் செய்துள்ளார்களா என்று பார்த்தோம். இந்த நியூஸ் கார்டை செந்தில்
@drsenthil84 என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 மே 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டில் ஏராளமான பிழைகள். கமிஷன் என்பதை கமிசன் என்றும், ஆணைய பரிந்துரை என்பதை ஆணய பரிந்துரை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், வழக்கமாக சன் டிவி நியூஸ் கார்டுகளில் இருப்பது போன்று வாட்டர் மார்க் டிசைன் இந்த நியூஸ் கார்டில் இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய, ஆய்வு மேற்கொண்டோம். முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டு சன் டிவி-யில் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை.
அடுத்ததாக, இந்த நியூஸ் கார்டை சன் டிவி டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜுக்கு அனுப்பினோம். அவரும் “இந்த நியூஸ் கார்டு போலியானது, இதை சன் நியூஸ் வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார்.
முடிவு:
ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து தி.மு.க ரூ.100 கோடி கமிஷன் பெற்றது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிஷன் வாங்கிய தி.மு.க என்று பரவும் போலி நியூஸ் கார்டு!
Written By: Chendur PandianResult: False
