இரவில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க வாகனம் ஏற்பாடு செய்து தருகிறதா போலீஸ்?

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

இரவில் பெண்கள் வீட்டுக்கு செல்ல வாகனம் ஏதும் இல்லை என்றால் காவல் துறைக்கு போன் செய்தால், வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்குப் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “காவல்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது என்னவென்றால் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் வீட்டிற்கு செல்ல வாகனம் எதுவும் இல்லை என்றால் காவல்துறை உதவி எண்கள் 1091 & 7837018555 என்ற எண்களுக்குத் தொடர்புகொண்டு வாகன உதவி கேட்கலாம் மேலும் இந்த சேவையானது வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும்… அப்படி போன் செய்து கேட்கும் பொழுது அருகிலுள்ள காவல்துறை வாகனம் அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும், மேலும் இது முற்றிலும் இலவசமாக சேவையாகும்… இந்த பதிவை அனைவருக்கும் அனுப்புங்கள்….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த பதிவை தற்போது யாரும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். அப்போது, முனைவர் பா.குப்புராஜ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த புகைப்பட பதிவை நவம்பர் 20, 2022 அன்று பதிவிட்டிருப்பது தெரிந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

இரவில் ஆட்டோ, டாக்ஸியில் பயணிக்கும் பெண்கள் தாங்கள் பயணிக்கும் வாகனத்தின் பதிவு எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் போலீசுக்கு அனுப்பினால், அந்த வாகனத்தை போலீஸ் கண்காணிக்கும் என்று சில வருடங்களுக்கு முன்பு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அப்படி எந்த ஒரு சேவையையும் தமிழ்நாடு போலீஸ் அறிமுகம் செய்யவில்லை என்று காவல் துறை உயர் அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இது வதந்தி என்று சமூக ஊடகங்களில் பதிவும் வெளியிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

தற்போது, இரவில் வாகனம் இன்றி தவிக்கும் பெண்களுக்கு தமிழ்நாடு போலீசே வாகனம் ஏற்பாடு செய்து தருவதாக வதந்தி பரவி வருகிறது. அப்படி எந்த ஒரு திட்டமும் தமிழ் நாட்டில் நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை. இது பற்றி சமூக ஊடகங்களில் தேடிய போது 2019ம் ஆண்டில் இருந்து இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாட்டின் மற்ற மாநிலங்களிலும் இப்படி ஒரு திட்டம் தொடங்கப்பட்டது போன்று பலரும் இதே எண்களை குறிப்பிட்டு பதிவிட்டு வருவதை காண முடிந்தது.

எனவே, முன்பு எப்போதாவது இப்படி அறிவிப்பு வெளியானதா என்று அறிந்துகொள்ள காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். அவர், இப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்றார். காவல் துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொள்வதற்கு முன்பு இது பற்றி ஏதும் அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று தமிழ்நாடு காவல் துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

அப்போது, கடந்த 2020ம் ஆண்டில் இந்த பதிவின் ஆங்கில ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து இது பொய்யான செய்தி என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில், இரவில் 1091 & 7837018555 என்ற எண்களுக்கு போன் செய்தால் பெண்களுக்கு வாகன வசதி செய்து தரப்படும் என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் வீட்டிற்கு செல்ல வாகனம் எதுவும் இல்லை என்றால் காவல்துறை உதவி எண்களைத் தொடர்புகொண்டால் வாகன வசதி செய்து தரப்படும் என்று பரவும் பதிவு தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இரவில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க வாகனம் ஏற்பாடு செய்து தருகிறதா போலீஸ்?

Fact Check By: Chendur Pandian 

Result: False